எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்த பன்னீர்செல்வம்!

0
83

அதிமுகவின் பொதுக்குழுவிற்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையே அதிமுகவில் தொடர வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாற்றினார்.

அப்போது அதிமுகவிலிருக்கின்ற ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு நன்றி, எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழ்நிலை அதிமுகவில் உண்டானது. அவற்றை அவற்றை மனதில் இருந்து நீக்கிவிட வேண்டும், நடந்ததை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும், எங்களுக்குள் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை.

சிறு சிறு பிரச்சனை எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு உள்ளிட்டவை காரணமாக ஆளும் திமுக மகிழ்ச்சியடையும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிமுக எம் ஜி ஆரால், தொண்டர்களால், தொண்டர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரையில் அவரை யாரும் வெல்ல முடியவில்லை என்று தெரிவித்துள்ளார் பன்னீர்செல்வம்.

எம்ஜிஆர் மறைந்த போது இருந்த 17 லட்சம் உறுப்பினர்களை ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தொண்டர் இயக்கமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாற்றினார். 16 வருடங்களாக முதல்வராக இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகத்தை வைத்திருந்தார்.

நான்கரை ஆண்டு காலம் அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பயணம் செய்தோம். மீண்டும் அந்த நிலை வரவேண்டும் என்பதே எங்களுடைய தலையாய கோரிக்கை என கூறியிருக்கிறார் பன்னீர்செல்வம்.

தர்ம யுத்தத்திற்கு பிறகு 2 தலைமையின் படியே குறையின்றி இருவரும் ஒன்றிணைந்து பயணம் செய்தோம். அம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அசாதாரண சூழ்நிலை உண்டானது.

அவற்றை எங்களுடைய மனதிலிருந்து நீக்கிவிட்டு மறுபடியும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்காக சேவை புரிய வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு என்று தெரிவித்தார் பன்னீர்செல்வம்.