நேர மேலாண்மையை அம்மாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்! முதல் பந்திலேயே நான் அவுட்! ருசிகர பதிலளித்த பிரதமர் மோடி

0
109

நேர மேலாண்மையை அம்மாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்! முதல் பந்திலேயே நான் அவுட்! ருசிகர பதிலளித்த பிரதமர் மோடி 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி அவர்கள் கேட்ட கேள்விக்கு திறமையாக பதில் அளித்துள்ளார்.

தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும் பயத்தையும் போக்கி துணிவுடன் தேர்வு எதிர்கொள்ள மோடி 2018 ஆம் ஆண்டு முதல் பரிக்ஷா இ சர்ச்சா (தேர்வும் தெளிவும்)  என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களை சந்தித்து பேசி அவர்களின் தேர்வு நேரத்தில் ஏற்படும் மன பயத்தை போக்கும் வகையில் கலந்துரையாடி வருகிறார்.

இதில் தேர்வு பயம் போக்குவது எவ்வாறு? அதிலிருந்து மீள்வது எவ்வாறு? மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதுவது குறித்த ஆலோசனைகளை பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான பரிக்ஷா இ சர்ச்சா என்ற நிகழ்ச்சி இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியது. இதில் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், ஆசிரியர் அவர்களுடன் பிரதமர் மோடி நேரில் தேர்வு பற்றி உரையாடினார்.

அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விக்கு தெளிவாகவும், நகைச்சுவையாகவும், சுவாரஸ்யம் ஏற்படும் வண்ணம் விரிவாகவும் பதில் அளித்தார். மேலும் மாணவர்களின் கேள்விக்கு டக் டக் என்று பதில் அளித்து அசத்தினார்.

அப்போது ஒரு மாணவர் தேர்வு முடிவுகள் நன்றாக இல்லாத சமயத்தில் குடும்ப சூழ்நிலை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். அதற்கு மோடி குடும்பத்தில் எதிர்பார்ப்புகள் இருப்பது இயல்பானது தான். ஆனால் சமூக அந்தஸ்த்துக்காக அந்த எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடாது. அது சரியானது அல்ல என்று பதில் அளித்தார்.

அடுத்து ஒரு மாணவர் எனது வேலைகள் அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் எவ்வாறு முடிப்பது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி நேர மேலாண்மை என்பது தேர்வுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கு முக்கியமானது. மேலாண்மையை உங்கள் தாயிடம் கற்றுக் கொள்ளுங்கள். அதை எவ்வாறு அவர் பயன்படுத்துகிறார் என கூர்ந்து கவனியுங்கள். அதிலிருந்து உங்கள் நேரம் மேலாண்மையை திட்டமிடுவது குறித்து தெரிந்து கொள்ள முடியும். அம்மாவின் பாசத்தையும் நேர மேலாண்மையையும் பிரதமர் மோடி விளக்கிக் கூறினார்.

மதுரை சார்ந்த மாணவி அஸ்வினி தேர்வினால் வரும் மன அழுத்தத்தை எவ்வாறு போக்குவது என கேள்வி கேட்டார். மோடி முதல் பந்திலேயே அஸ்வினி என்னை அவுட் ஆக்க நினைக்கிறார் என்று நகைச்சுவையாக கூறினார். தேர்வில் மாணவர்களிடம் பெற்றோர் எதிர்பார்ப்பது இயல்பானது தான். அதை பற்றி கவலைப்படாமல் தேர்வில் மட்டும் முழுமையாக தங்களது கவனத்தை மாணவர்கள் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தேர்வு, மதிப்பெண் குறித்த அழுத்தத்தை தங்கள் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் கொடுக்க வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

சில மாணவர்கள் தேர்வில் ஏமாற்றுவதற்கு தங்கள் படைப்பாற்றலை பயன்படுத்துகிறார்கள். படைப்பாற்றலையும் நேரத்தையும் சரியான முறையில், நேர்மையான வழியில், பயன்படுத்தினால் நிச்சயம் கிட்டும். மாணவர்கள் குறுக்கு வழிகளை ஒருபோதும் தேர்வு செய்யக்கூடாது. நம் மீது முழுமையாக கவனம் செலுத்துங்கள். இன்று அவர் கூறினார்.

நான் நமது நேரத்தில் ஆறு மணி நேரம் திரையில் செலவிடுகிறோம். கடவுள் நமக்கு அபரிதமான ஆற்றலையும் தனித்துவமான இடத்தையும் கொடுத்திருக்கும் பொழுது தேவையில்லாத கேளிக்கைகளில் அடிமையாகி ஏன் நமது நேரத்தை  வீணாக்க வேண்டும். என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

விமர்சனத்திற்கும் தடைக்கும் மிகவும் சிறிய மெல்லிய கோடு தான் உள்ளது.  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆக்கபூர்வமான, நேர்மையான, வழியில் விமர்சிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். மோடியின் இந்த விளக்க உரைகளை மாணவர்கள் மிகவும் ரசித்து கைதட்டி பாராட்டினர்.