சென்னையில் இதுக்கு இன்றே கடைசி நாள்! தவற விடாதீர்கள் 

0
80
Tamil Nadu Assembly
Tamil Nadu Assembly

சென்னையில் இதுக்கு இன்றே கடைசி நாள்! தவற விடாதீர்கள்

சென்னையில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி மற்றும் குடிநீர் வரியை செலுத்த இன்று கடைசி நாள் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்துவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் சென்னையில் புதிய சொத்து வரி வசூலிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் அடிப்படையில் புதிய சொத்து வரி தொடர்பான நோட்டீஸ் ஒவ்வொரு வீடுகளுக்கும் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் பொதுமக்கள் அவர்களது சொத்துவரியை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் நடப்பு முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்த இன்றே கடைசி நாள் ஆகும். இதை கருத்தில்கொண்டு கடந்த ஒரு வாரமாக சென்னையில் தினமும் 15 ஆயிரம் பேர் சொத்துவரி செலுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் நேற்று வரை ரூ.650 கோடி சொத்துவரி வசூல் ஆகியுள்ளது.

மேலும் இன்று கடைசி நாள் என்பதால் இரவு 12 மணி வரை பொதுமக்கள் சொத்துவரியை செலுத்தலாம் என்று கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் இந்த நிதியாண்டில் முதல் அரையாண்டில் ரூ.700 கோடி சொத்துவரி வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைப்போலவே சென்னையில் குடிநீர் வாரியத்திற்கான குடிநீர் வரியை செலுத்தவும் இன்று தான் கடைசி நாள் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.