கர்நாடக அரசியலில் குழப்பம்: கூட்டணி ஆட்சியை தக்கவைத்து கொள்வாரா முதல்வர் குமாரசாமி?

கர்நாடக அரசியலில் குழப்பம்: கூட்டணி ஆட்சியை தக்கவைத்து கொள்வாரா முதல்வர் குமாரசாமி?

கர்நாடகத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் புதிய நடவடிக்கையாக அதிருப்தியில் உள்ள  எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க கர்நாடக முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஜனதா தளம் சார்பாக குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகளின் இந்த கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக கடந்த ஓராண்டாகவே தீவிர முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக கர்நாடகாவிலும்  மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மத்தியில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியின் உற்சாகத்தில் பாஜகவினர் கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை கையில் எடுப்பார்கள் என்று பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதற்கேற்றவாறு காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் பாஜக தலைவர்களை சந்தித்து பேசியது பரபரப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

இதனால் பாஜகவின் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்கும் பணியில் கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.சி.பட்டீல் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.வான சங்கர் ஆகிய இரண்டு பேருக்கும் அமைச்சர் பதவி வழங்குவது குறித்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மகேஷ் கமடள்ளி நேற்று முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வர் ஆகியோரை நேரில் சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையால் கூட்டணி ஆட்சிக்கு ஏற்பட்டு வந்த சிக்கல் தற்போது ஓரளவு நீங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கி நடைபெற்று வரும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள வசதியாக மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் அக்கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

தற்போது உள்ள அமைச்சரவையில் காங்கிரசுக்கு ஒன்று மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு இரண்டு  என்று மொத்தமாக 3 மந்திரி பதவிகள் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக தலைவர் எடியூரப்பா கூறுகையில் ‘நாங்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. அதனால் நாங்கள் புதிதாக சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இது கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘கூட்டணி ஆட்சி உறுதியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரமேஷ் ஜார்கிகோளி உள்பட எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியைவிட்டு விலக மாட்டார்கள். கடந்த ஓராண்டாக பாஜகவின் எடியூரப்பா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று கூறி வருகிறார். மேலும் வருகிற 1 ஆம் தேதி கர்நாடகத்தில் பாஜக தலைமையில் அரசு அமைப்பேன் என்று எடியூரப்பா கூறியிருக்கிறார். அப்படி முடியாவிட்டால் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா?’ என்று சவால்விட்டு உள்ளார். இதனால் கர்நாடகத்தில் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக உள்ளது.

Copy
WhatsApp chat