கோவை திமுகவின் கோட்டையாக மாறுகிறதா? அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த செந்தில் பாலாஜி!

0
82

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.இதனைத் தொடர்ந்து தற்போது வரும் 19-ம் தேதி நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்று தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோயமுத்தூர் மாவட்டத்தில் மட்டும் திமுக தோல்வியை சந்தித்தது. அங்கே ஒரு தொகுதியில் கூட அந்த கட்சி வெற்றி பெறவில்லை. இதனால் அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாயினர்.

இதனை கருத்தில் கொண்டு எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோயம்புத்தூர் மாநகராட்சியை ஒட்டுமொத்தமாக தன் கைக்குள் கொண்டு வரவேண்டுமென்று ஆளும்கட்சி முயற்சிக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டுமென அமைச்சர் செந்தில்பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்து திமுக அறிவித்திருக்கிறது.

இதனையடுத்து கோயம்புத்தூர் மாவட்டத்தின் மூலைமுடுக்கெல்லாம் சுற்றுப் பயணத்தை தொடங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட செயலாளர், முதல் அடிமட்ட உறுப்பினர் வரையில் எல்லோரையும் கௌரவப்படுத்தி கட்சித் தொண்டர்களுக்கு புது உற்சாகத்தை வழங்கியிருக்கிறார்.

பொதுமக்களிடையே கவனத்தை பெற்றாலும் கூட அதிமுகவினரின் கவனத்தை பெறவில்லை என தெரிவிக்கிறார்கள் கோயம்புத்தூர் மாவட்ட உடன்பிறப்புகள். யார், யார் கட்சிக்கு உழைத்தாலும் அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காமல் வாரிசுகளுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து அதிருப்தியை ஏற்படுத்தகியிருக்கிறார்கள் செந்தில் பாலாஜியும் மற்றும் அவரை சார்ந்தவர்களும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் திமுகவைச் சார்ந்தவர்கள். அதோடு மட்டுமல்லாமல் மேலிடத்திற்கு மிகப்பெரிய புகார் பட்டியலையும் வாசித்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் ஒரு விவகாரத்தை செய்திருக்கிறார்.

பொள்ளாச்சியை அடுத்திருக்கின்ற பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 3, 6,7,8,9,11,12,14,15 ஆகிய ஒன்பது வார்டுகளில் 8 திமுக வேட்பாளர்கள் மற்றுமொரு சுயேச்சை வேட்பாளரை எதிர்த்து தாக்கல் செய்திருந்த அனைத்து வேட்பாளர்களும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள்.இதன் காரணமாக, மேலே குறிப்பிடப்பட்ட வார்டுகளில் திமுகவின் வேட்பாளர்கள் உறுதியாகிவிட்டது.

இதன் காரணமாக, மொத்தமுள்ள 15 வார்டுகளில் பெரும்பான்மை வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதன் காரணமாக, நெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியிருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டமே ஒட்டுமொத்தமாக அதிமுக கையிலிருக்கிறது என்று தெரிவித்த அதிமுகவினர் இடையே இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.