அன்னாசி பழத்தால் யானை உயிரிழந்ததா? – கேரள வனத்துறையினர் புதிய விளக்கம்

இந்தியாவில் இயற்கை வளங்களை பேணி காப்பதில் முக்கிய மாநிலமாக திகழ்வது கேரளா. அந்த மாநிலத்தின் வனப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் யானை இறந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது.

பாலக்காட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நுழைந்த பெண் யானையொன்று பசியால் அங்கிருந்த அன்னாசிப் பழத்தை உட்கொண்டுள்ளது. அதனுள் வெடி மருந்து இருந்ததால் அது அதன் வாயிலேயே வெடிக்கத் தொடங்க, தாடை ப்பகுதி சிதைந்து, நரக வேதனையில் துடித்த யானை, அருகிலிருந்த வெள்ளியாற்றில் இறங்கியது. இந்த தகவலறிந்து அங்கு விரைந்த வனத்துறையினர் யானையை நீரிலிருந்து வெளியேற்ற கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

யானையை வெளியேற்ற முடியாததால், கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன. அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத நிலையில் இரு கட்டத்தில் நதி நீரிலேயே யானை இறந்து போனது. இதனையடுத்து யானையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர், உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். அப்போது உயிரிழந்த யானை கர்ப்பமாக இருந்ததையும் அதன் வயிற்றில் ஒரு மாத குட்டியை வயிற்றில் சுமந்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து, அதனை மீட்கச் சென்ற வனத்துறை அதிகாரியான மோகன் கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் கண்ணீருடன் எழுதிய பதிவு சமூக வலைத்தளங்களை அதிரச் செய்தது. இதனால் இது சமூக வலைத்தளங்களில் பரவ, தொலைக்காட்சிகளிலும் செய்தியானது. அன்னாசிப் பழத்தில் வெடி மருந்து வைத்து கொன்றது மனிதாபிமானமற்ற செயல் என அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வந்தனர்.

மற்றொரு பக்க கேரளாவை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எந்த மாநிலத்தையும் விட தங்கள் மாநிலத்தில் யானை வளர்ப்பை பற்றி நன்கு அறிந்தவர்கள் என்றும் யாரோ ஒருவர் செய்த செயலுக்கு ஒட்டு மொத்த மாநிலத்தையே குறை கூறுவதா என்று தங்கள் கருத்தை பகிர்ந்து வந்தனர்.

இதனை தொடர்ந்து, யானை உயிரிழந்தது குறித்து காவல்துறையினரும், வனத்துறையினரும் வழக்குகளை பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் காவல் துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், யானை தின்ற வெடிமருந்து கலந்த அன்னாசிப் பழம் அதை கொல்வதற்காக அளிக்கப்படவில்லை என்றும், பயிர்களை காட்டுப் பன்றிகளிடமிருந்து காப்பதற்காக வைத்த அன்னாசிப் பழத்தை யானை தெரியாமல் உட்கொண்டுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

Copy

Comments are closed.

WhatsApp chat