ஐபிஎல் போட்டிகள் வேண்டாம்:இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை !

ஐபிஎல் போட்டிகள் வேண்டாம்:இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை !

இந்திய வீரர்கள் சோர்வாகக் கருதினால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டாம் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ சார்பாக ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐபிஎல் போட்டித் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சம் இரண்டு நாட்கள் இடைவெளியில் வீரர்கள் தொடர்ந்து 14 போட்டிகளில் விளையாட வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் பல வீரர்கள் காயமடையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆனால் இதில் கொழிக்கும் பணத்தின் காரணமாக இதில் விளையாட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தேசிய அணிகளுக்காக போட்டிகளில் விளையாடும் போது அதிக சோர்வாகக் காணப்படுகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஐபிஎல் போட்டிகளைப் பற்றி சர்ச்சையானக் கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘ஐபிஎல் தொடரில் விளையாடுவதை விடவும் இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம். இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளால் சோர்வாகக் கருதினால் அந்த போட்டிகளை தவிர்த்து விடுங்கள். இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்” என கூறியுள்ளார். இந்த கருத்தானது இந்திய ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிசிசிஐக்கும் கபில்தேவ்வுக்கும் இடையே பிரச்சனை உருவாகி அவர் ஐசிஎல் எனும் கிரிக்கெட் தொடரை ஆரம்பித்து நடத்தினார். அதுதான் ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னோடியாக அமைந்தது. அதன் பிறகு இரு தரப்புக்கும் சமாதானம் ஏற்பட்டு கபில்தேவ் பிசிசிஐ உடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரின் இந்த கருத்து இப்போது மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.