கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்துக்கு இதுவே காரணம்! கமல்ஹாசன் வெளியிட்ட பகீர் தகவல் 

0
143
Kamal Haasan
Kamal Haasan

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்துக்கு இதுவே காரணம்! கமல்ஹாசன் வெளியிட்ட பகீர் தகவல்

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணத்தில் காவல்துறை துரித நடவடிக்கை எதுவும் எடுக்காததால் மக்கள் கோபமடைந்து கலவரத்தில் ஈடுபட்டதாக மக்கள் நீதி மைய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோரும், உறவினர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து, மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துரித நடவடிக்கை எடுக்க காவல் துறை தவறியதால், பெரும் கலவரம் வெடித்துள்ளது. கல் வீச்சில் காவல் துறையினர் காயமடைந்ததுடன், பள்ளியும் சூறையாடப்பட்டுள்ளது. பள்ளி வளாகமும், வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

எனவே, மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால், அது தொடர்பாகவும் உரிய விசாரணை மேற்கொண்டு, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதே மக்களை அமைதிப்படுத்தும். போராட்டம் என்ற பெயரில் பெரும் வன்முறை நடந்துள்ளதை ஏற்க முடியாது.

மாணவியின் பெற்றோர் கூறிய குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்தியிருக்கக் கூடாது. கலவரத்துக்குப் பின்னர் மேற்கொண்ட கைது நடவடிக்கைகளை முன்னரே எடுத்திருந்தால், பெரும் சேதத்தை தவிர்த்திருக்கலாம்.

இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை; தவறான பாதையில் பயணிக்கிறது என்பதே மக்களின் கோபத்துக்குக் காரணம். சமீபகாலமாகவே பள்ளிகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் கவலையளிப்பதாகவே உள்ளன.

சிறு பிரச்சினைக்குக் கூட தற்கொலை செய்துகொள்வதும், சக மாணவியையே பாலியல் பலாத்காரம் செய்வது, ஆசிரியர்களைத் தாக்குவது போன்ற செயல்களும் வேதனையளிக்கின்றன.

அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளிகளோ, அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கைநழுவுகின்றனவோ? பிரச்சினைகள் ஏற்படும் ஒவ்வொரு முறையும், இனியும் இதுபோன்று நிகழாமல் பார்த்துக் கொள்வோம் என்று கூறுவதும், மீண்டும் மீண்டும் சிக்கல்கள் ஏற்படுவதும் தொடர்கதையாகிவிட்டது. புத்தகக் கல்வியுடன், தன்னம்பிக்கை, தைரியம் வளர்க்கும் கருத்துகளையும், நெறிமுறைகளையும் கற்றுத்தர வேண்டும்.

மாணவ, மாணவிகளின் பிரச்சினைகள், நெருக்கடிகளைத் தெரிந்துகொள்ளவும், அவர்களுக்குக் கவுன்சிலிங் அளிக்கவும் பிரத்யேகக் குழுவை அமைக்க வேண்டும். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அரசின் விதிமுறைகள், நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.