வேட்டி கட்டினால் மட்டும் ஓட்டு கிடைக்காது! பிரதமர் மோடியை விமர்சிக்கும் கமல்ஹாசன்

வேட்டி கட்டினால் மட்டும் ஓட்டு கிடைக்காது! பிரதமர் மோடியை விமர்சிக்கும் கமல்ஹாசன்

வேட்டி கட்டினால் மட்டும் தமிழ்நாட்டில் ஓட்டு விழுமா? அதற்கு அவர் செய்ய வேண்டிய செயல்கள் மக்களைச் சென்றடையும் செயலாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களை கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

வருகிற 7 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு வழக்கமாக இல்லாத அளவிற்கு பிரபலமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நடிகர் கமல்ஹாசனின் அடுத்த அரசியல் நகர்விற்கான ஆரம்பமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் ஒரு வார பத்திரிக்கைக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் பிரதமர் மோடியையும்,அமித்ஷாவையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த பேட்டியில் மோடி, அமித்ஷா குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் கூறியிருப்பதாவது.

அரசியல்வாதிகள் நாகலாந்துக்கு போகும் போது கொம்பு வைத்த தொப்பி போட்டுக் கொண்டு நடனம் ஆடுவார்கள். அம்பு விடும் கூட்டத்துக்கு போய் அம்பு விட்டு விட்டு அதன்பிறகு அதை தொடவே மாட்டார்கள்.

பிரதமர் மோடி

இதெல்லாம் காலம் காலமாக அரசியல்வாதிகள் செய்து வருவது.இதற்கெல்லாம் மக்கள் மயங்கிவிட மாட்டார்கள். எல்லோருக்கும் ‘அட, இவருக்கு வேட்டி கூட கட்டத் தெரியுமா?’ என்ற ஆச்சர்யம் மட்டுமே முதலில் ஏற்படும். வேட்டி கட்டினால் மட்டுமே தமிழ்நாட்டில் ஓட்டு விழுமா? அதற்காக அவர் செய்ய வேண்டிய செயல்கள் மக்களைச் சென்றடையும் செயலாக இருக்க வேண்டும் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் பேசிய அவர் இந்தியை பொறுத்த வரை நமக்கு வெறுப்பு கிடையாது. எந்த மொழி மீதும் நமக்கு வெறுப்பு கிடையாது. இதை வட இந்தியாவில் வசிப்பவர்கள் இன்றும் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். நமக்கு மற்ற மொழிகள் மீது வெறுப்பு இருந்தால் நெஞ்சை நிமிர்த்தி சந்தோ‌ஷமாக வங்க மொழியில் நாம் தேசிய கீதம் பாடுவோமா” என்றும் கூறியுள்ளார்.

மேலும் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நடிகர் சிரஞ்சீவி கூறிய அறிவுரைக்கு பதில் அளித்துள்ள கமல் அவர் எனக்கு நெருங்கிய நண்பர். ஆனால், அவருடைய அனுபவம் என்னுடைய அனுபவமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லா அறிவுரைகளையும் கேட்டுக் கொள்ளலாமே தவிர அதன்படி நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஆனால், இந்த முடிவு கொள்கை சம்பந்தமானது. தமிழகத்துக்கு எது வேண்டும் என்கிற நேர்மை சம்பந்தமானது. மிக ஜாக்கிரதையாக கூட்டணி அமைக்க வேண்டும். கூட்டணி பற்றி விரோத மனப்பான்மை கிடையாது. ஆனால், நேர்மைக்கு விரோதமான எவற்றையும் எதிர்கொள்ளும் மனப்பான்மை எங்களுக்கு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

Copy
WhatsApp chat