அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக பள்ளிக்கல்வித்துறை!

0
165

தற்போது மாதந்தோறும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

அதில் தொழில் துறை கலைஞர்களாக எதிர்காலத்தில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு உருவாக்கி தரும் நோக்கத்துடன் பல்வேறு கலை செயல்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இனி மாதந்தோறும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டம் ஒன்றை சிறார் திரைப்பட விழா என்ற பெயரில் புகுத்தியிருக்கிறது.

காட்சி ஊடகத்தின் மூலமாக உலகத்தை புதிய பார்வையில் மாணவர்கள் பார்ப்பதற்கு வழி வகை செய்யவும் வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்துவதற்கு மட்டுமே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாதத்தின் 2வது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கதைக்களம், கதை மாந்தர்கள் உரையாடல், கதை நடக்கும் இடம், ஒளிப்பதிவில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள் ஒலி மற்றும் ஒட்டுமொத்த திரைப்படம் தொடர்பாக அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும் ஸ்பாட் லைட் என்ற நிகழ்வு நடைபெறும்.

இந்த நிகழ்வின் போது சிறப்பாக பதில் அளிக்கும் ஒருவருக்கும், அணி ஒன்றுக்கும், பரிசுகள் வழங்கப்படும். பள்ளியளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவிலும், பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சிறார் திரைப்பட திருவிழாவின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி நிகழ்வு மாநில அளவில் ஒரு வாரத்திற்கு நடைபெறும் இதில் பங்குபெறும் மாணவர்களிலிருந்து 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உலக சினிமா தொடர்பாக மேலும் அறிந்து கொள்ளும் விதத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த செயல்பாட்டுக்கான சில்வர் ஸ்கிரீன் ஆப் என்ற கைபேசி செயலி ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக அனைத்து நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது