உயிருக்கு எமனாக மாறி, குழந்தைகளை அடிமையாக்கும் ஃப்ரீ பையர்,பப்ஜிக்கு தடை?!! பிரதமருக்கு நீதிபதி அவசர கடிதம்!!

0
76

உயிருக்கு எமனாக மாறி, குழந்தைகளை அடிமையாக்கும் ஃப்ரீ பையர்,பப்ஜிக்கு தடை?!! பிரதமருக்கு நீதிபதி அவசர கடிதம்!!

குழந்தைகளை அடிமைபடுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லியை சேர்ந்த நீதிபதி நரேஷ் குமார் அவர்கள் கடிதம் எழுதி இருக்கின்றார்.

சிறுவர் மற்றும் சிறுமிகளை முழுவதுமாக ஈர்த்த பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு குழந்தைகளை மிகவும் பாதிப்பதாகவும், அத்துடன் அந்த விளையாட்டு போட்டிகள் குழந்தைகளின் மன நலத்தை பாதிப்பதோடு உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பப்ஜி விளையாட்டு செயலி உட்பட 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும், ஃப்ரீ பையர் போன்ற பல விளையாட்டுகள் தடை செய்யப்படாமல் இருப்பதால் அவற்றை விளையாடும் குழந்தைகள் அதற்கு முழுவதுமாக அடிமையாகின்றனர்.

இந்த நிலையில், இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லியை சேர்ந்த மாவட்ட கூடுதல் நீதிபதி நரேஷ் குமார் கடிதம் எழுதி இருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் நீதிபதி நரேஷ் குமார் கூறியிருப்பதாவது, ‘குழந்தைகளை கெடுத்து அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் பப்ஜி மொபைல் விளையாட்டை முன்பே தடை செய்த உங்கள் நடவடிக்கையை நாட்டு மக்கள் பாராட்டினர்.

இருந்தாலும், அதே போன்ற ஃப்ரீ பெயர் மற்றும் பப்ஜி இந்தியா ஆகிய இரண்டு ஆன்லைன் விளையாட்டுகள் இணையதளத்தில் எளிதாக கிடைக்கின்றன. மேலும் பல ஆன்லைன் விளையாட்டு செயலிகளும் இருக்கின்றன. இது போன்ற விளையாட்டுகளை விளையாடும் குழந்தைகள் ஏற்கனவே தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடிய குழந்தைகள் போல மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

அத்துடன் இது எதிர்கால இளைய சமுதாயத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் அடிமைப்படுத்தும் ஒரு விளையாட்டாக இருப்பதால், இதனை நீங்கள் தடைசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்காக புதிய சட்டம் கொண்டு வரவேண்டும்.

குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் நீதிபதி நரேஷ்குமார் கூறியிருக்கின்றார்.

author avatar
Jayachithra