புளித்த மாவு விவகாரத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எதிராக களமிறங்கிய வணிகர் சங்கம்,கைதாவாரா ஜெமோ?

0
88

ஜெயமோகன் … மலையாள மற்றும் தமிழ் நாவலாசிரியர் … நிறைய விருதுகள் … கூடவே சேர்த்து நிறைய வில்லங்கங்களும் … சமீபமாய் ரஜினி மற்றும் விஜய் பட வசனகர்த்தா … சுஜாதா மற்றும் பாலகுமாரன் காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம் எனலாம் . இவரின் வசனங்கள் அதில் அடங்கா … இவரும் எந்த ஒரு மாதிரிக்குள்ளும் அடங்குவதில்லை … வித்தியாச வில்லங்க எழுத்தாளர் …. அறம் , காடு , விஷ்ணுபுரம் என்று வெற்றி வரிசை நாவல்கள் ஏராளம் .

14 ம் தேதியில் ஆரம்பித்தது இந்த புளித்த மாவு விவகாரம் … நாகர்கோவிலை வசிப்பிடமாகக் கொண்ட ஜெமோ ( ரசிகர்கள் அளித்த பெயர் ) பக்கத்தில் பார்வதிபுரத்தில் இருந்து தோசைமாவு பாக்கெட் வாங்கிச் சென்றுள்ளார் . வீட்டிற்கு சென்ற பின்னே அது மூன்று நாட்களுக்கு முந்தைய மாவென்றும் மிகவும் புளித்துப் போன நிலையில் இருந்ததும் கண்டறியப் பட்டுள்ளது .

மாவை திருப்பித் தர சென்ற இடத்தில் ஜெமோ மாவு பாக்கெட்டைத் தூக்கி கடைக்காரரின் மனைவி மேல் எறிய வாய்த் தகராறு கைகலப்பானது . கடைக்காரர் மிகுந்த போதையில் இருந்துள்ளார். இருவரும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டுள்ளனர் . ஜெமோ இதை போலிஸ் கேஸாக்கி அருகிலிருந்த அரசு மருத்துவ மனையில் அட்மிட்டாகி கையில் வாரப் பத்திரிக்கையுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார் .

கடைக்காரர் திமுகவைச் சேர்ந்தவரென்பதால் இணையத்தில் இன்னும் வைரலானது . திமுக மேடைப் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் சற்று முன் எழுதிய கவிதையும் வைரலாகிக் கொண்டிருக்கிறது .

ஜெமோ தன் பிளாக்கில் திமுகவிற்கு ஆதரவாய் பதிவிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது . கட்சியின் ஆதரவு கிடைக்கப் பெறாத அந்த கடைக்காரருக்கு ஆதரவாய் இன்று வணிக சங்கங்கள் களமிறங்கி ஜெமோவைக் கைது செய்யக் கோருகின்றனர் .

ஒரே நாளில் மாமன்னன் ராஜராஜன் பா. இரஞ்சித் விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு இணையத்தை ஜெமோவும் புளித்த மாவும் நிரப்புகின்றது .

எது எப்படியாயினும் வீட்டில் அரைத்த மாவில் செய்யும் இட்லியும் தோசையுமோ உடல் நலத்திற்கு உகந்தது என்று சொல்லிக் கொண்டு …..

இதோ நியூஸ் 4 தமிழ் வாசகர்களுக்காக மனுஷ்யபுத்திரனின் வைரல் கவிதை

மகா கலைஞனும் புளித்த மாவும்
…………
மனுஷ்ய புத்திரன்
………..

துரதிஷ்டம் பிடித்த இரவொன்றில்
மகா கலைஞன் ஒருவனை
விதி மாவுக்கடை ஒன்றை நோக்கி
அழைத்துச் சென்றது

மகா கவிஞன் ஒருவனுக்கு
மதமேறிய கோயில் யானை ஒன்றால்
துயரம் காத்திருந்ததுபோல
மகா கலைஞனுக்கு
ஒரு குடிவெறியேறிய
மாவுக்கடைக்காரன் வடிவில்
துயரம் காத்திருந்தது

இப்படித்தான் தோழர்களே
வரலாற்றில் மகத்தான சம்பவங்கள்
முதல் முறை அவலத்திலும்
இரண்டாம் முறை கேலிக்கூத்திலும் முடிகின்றன

ஒரு புளித்த மாவு பாக்கெட்டிற்குள்
காப்பியங்களை கறைப்படுத்தும்
சாத்தானின் கைகள் ஒளிந்திருப்பதை அறியாமல்
மகா கலைஞன்
மாவுப்பாக்கெட்டுடன் வீடு திரும்பினான்

புளித்த மாவிலிருந்த
உயிர்க்கொல்லி பாக்டீரியாக்கள்
கண் விழித்து எழுந்ததை
தன் கூர்மையான படைப்புக் கண்களால் கண்டுகொண்ட மகாகலைஞன்
திடுக்கிட்டு மாவுபாக்கெட்டோடு
கடை நோக்கி விரைந்தான்
நீதி கேட்டு ஒரு நகரை எரித்த நிலம் இது
அறத்திற்காக பெற்ற மகனை
தேர்க்காலிட்ட நாடு இது
ஒரு புளித்த மாவுக்கான நீதி
பொங்கும் நேரம் வந்துவிட்டதை
யாருமே கவனிக்கவில்லை

ஏற்கனவே புளித்த வாழ்க்கையில்
புளித்த சாராய போதையில்
புளித்த மாவுவிற்ற கடைக்காரனால்
ஒரு மகா கலைஞனின் மொழியை
புரிந்துகொள்ள முடியவில்லை

பட்டத்து யானையின் காதில் புகுந்த
எறும்பைபோல
மகா கலைஞனின் தலைக்குள் புகுந்துவிட்ட
புளித்த மாவின் பாக்டீரியா
காவியச்சுவை குன்றிய
மானுட நடத்தை நோக்கி
மகா கலைஞனை நடத்தியது
அவன் அறம் கூறி வீசி எறிந்த
புளித்த மாவு பாக்கெட்
தரையில்பட்டு சிதறியபோது
பிரளயம் தொடங்கியது

மாவிலிருந்த
பல்லாயிரம் பாக்டீரியாக்கள்
பரவத் தொடங்கின
முதலில் கடைத்தெருவில்
பரவிய பாக்டீரியா
பிறகு அடுத்த தெருவுக்கு பரவியது
பிறகு பக்கத்து ஊருக்கு பரவி
சிற்றூர்களெங்கும் பரவியது
சிற்றூர் தாண்டி
பெரு நகரத்தையும் ஆக்ரமித்த
புளித்த மாவின் பாக்டீரியா
கடல்தாண்டி புலம் தாண்டி
நாடு கடந்து பரவத் தொடங்கியது

ஒரு பாக்டீரியா
மகாகலைஞனுக்காக பேசியது
இன்னொரு பாக்டீரியா மாவுக்கடைக்காரனுக்காக பேசியது
இன்னொரு பாக்டீரியா புளித்த மாவின் அரசியல் பேசியது
வேறொரு பாக்டீரியா சமூக நீதி பேசியது
சில பாக்டீரியாகள் அறம் பேசின
சில பாக்டீரியாக்கள் மறம் பேசின
சில பாக்டீரியாக்கள் புறம் பேசின
மகா கலைஞனின் தத்துவார்த்த விரோத பாக்டீரியாக்கள்
மகா கலைஞனின் தத்துவமும் புளித்துபோனவை என்றன
மகா கலைஞனின் இலக்கிய விரோத பாக்டீரியாக்கள்
மகா கலைஞனின் சொற்களும்
புளித்தவையே என்றன
மகா கலைஞனின் ஆதரவு பாக்டீரியாக்கள்
மககலைஞனின் எதிர்ப்பு பாக்டீரியாக்களை
கடித்துத் துப்ப முயன்றன
நடு நிலை பாக்டீரியாக்கள்
எந்தப்பக்கம் போவது என்றும் தெரியாமல்
குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன

புளித்த மாவிலிருந்து கிளம்பிய பாக்டீரியாக்கள்
டினோனஸர்களாக மாறி
ஊரைச்சூறையாடக்கண்ட மகா கலைஞன்
மனமுடைந்துபோனான்
ராப்பபகலாய் பாக்டீரியாக்களின்
உறுமல்களில் அவனால் தூங்க முடியவில்லை

அரசு மருத்துவமனையின்
பச்சை நிறப்படுக்கையொன்றில்
பாதுகாப்பாக ஒளிந்துகொண்டபோதுதான்
புளித்த மாவின் பாக்டீரியாக்களைவிட
மருத்துவமனையின் நிஜ பாக்டீரியாக்கள்
எவ்வளவு பயங்கரமானவை
என்பதை உணரத் தொடங்கினான்

ஒரு புனிதக் கலைஞனின்மீது
ஒரு புனித எழுத்தின்மீது
ஒரு பாக்கெட் புளித்தமாவு கொட்டினால்
எல்லாமே எவ்வளவு புளிப்பாகிவிடும் என்பதை
வரலாறு பதிவு செய்துகொண்டது

மாவீரன் நெப்போலியனை
வைரஸ் காய்ச்சல் ஒன்று வென்றதைப்போல
மகா கலைஞனின் உன்னதங்களை
புளித்த மாவின் பாக்டீரியா ஒன்று
வேட்டையாடிக்கொண்டிக்கிறது

பார்வதிபுரம் காவலர்
புலனாய்கின்றார்
17.6.2019
பிற்பகல் 3.30.
மனுஷ்ய புத்திரன்

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க எங்களது News4 Tamil முகநூல் பக்கத்தையும் ட்விட்டர் பக்கத்தையும் பின்தொடருங்கள்.

#Jayamohan #Dosabatter #DMKshopowner #ManushyaputhiranPoem #Vanigarsangam #Jayamohanarrest

author avatar
Parthipan K