அணு கதிர்வீச்சு கலந்த தண்ணீரை கடலில் கலக்க ஜப்பான் முடிவு! அதிர்ச்சியில் சீனா, தென்கொரியா…

0
89
Japan Fukushima nuclear water
Japan Fukushima nuclear water

அணு கதிர்வீச்சு கலந்த தண்ணீரை கடலில் கலக்க ஜப்பான் முடிவு! அதிர்ச்சியில் சீனா, தென்கொரியா…

ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை கடந்த 2011ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலால் பலத்த சேதமானது. இதனால், அந்த அணு உலை மூடப்பட்ட நிலையில், அணு கதிர்வீச்சுகளை தண்ணீர் மூலம் அகற்றி, கதிர்வீச்சு கொண்ட தண்ணீரை கொள்கலன்களில் அடைத்து வைத்துள்ளனர்.

தற்போது 1.2 மில்லியன் டன் தண்ணீர் கொள்கலன்களில் உள்ள நிலையில், அவற்றை கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு செய்துள்ளது. அந்தத் தண்ணீரில் உள்ள அனைத்து கதிரியக்கத்தையும் சுத்திகரிப்பு மூலம் நீர்த்துப்போக செய்த பிறகு, அவற்றை கடலில் கலக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கு பன்னாட்டு அணுசக்தி நிறுவனம் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ள ஜப்பான் அரசு, கதிரியக்கத்தை அகற்றிவிட்டு கடலில் திறக்கப்போவதாக கூறியுள்ளது. இதனை, அந்நாட்டு பிரதமர் யொஷிகைட் சுகா உறுதிப்படுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், தண்ணீரில் இருந்து கதிரியக்கத்தை முழுவதுமாக அகற்ற முடியாது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வளவு சுத்திகரித்தாலும் கதிரியியக்கம் முழுமையாக அகற்ற முடியாது என்றும், இதனை கடலில் கலந்து விட்டால் மீன் வளம் மட்டுமல்லாமல் கடல் மாசடையும் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே புவி வெப்பமயமாதலால் பல்வேறு சிக்கல்களை உலகம் சந்தித்து வரும் சூழலில் கதிரியக்கம் கொண்ட தண்ணீரை கடலில் கலந்து விட்டால் பல்வேறு பிரச்சனைகள் வரலாம் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் ஜப்பானின் அண்டை நாடுகளான தென்கொரியாவும், சீனாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜப்பானின் இந்த முடிவால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ள அந்நாட்டு வல்லுநர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.