ஜடேஜா எடுத்த முடிவு பாராட்டுக்குரியது: – ரோகித் சர்மா

0
73

ஜடேஜா எடுத்த முடிவு பாராட்டுக்குரியது: – ரோகித் சர்மா

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வந்தது. இந்நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 228 பந்துகளில் 175 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 65 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் எடுத்து பாலோ-ஆன் ஆனது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வந்தது இலங்கை அணி. இரண்டாவது  இன்னிங்சிலும் இலங்கை அணி வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் அந்த அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்த போட்டி குறித்து கூறியதாவது, “உண்மையில் கூற வேண்டுமானால் இந்த போட்டி மூன்று நாட்களில் முடியும் என நான் நினைத்து பார்க்கவில்லை. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இருப்பினும், எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.

விராட் கோலிக்கு இது 100-வது போட்டி ஆகும். எனவே, நிச்சயமாக இந்த போட்டியை வெல்ல வேண்டும் என நினைத்தோம். அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ஜடேஜா சிறப்பாக செயல்பட்டார். அவர் 175 ரன்களில் இருந்த போது டிக்ளேர் செய்யும் முடிவை அணியுடன் சேர்ந்து அவரும் அறிவிக்க விரும்பினார். அவரின் இந்த முடிவு அவர் சுயநலமற்றவர்  என்பதை காட்டுகிறது” என தெரிவித்தார்.

author avatar
Parthipan K