முன்னாள் அமைச்சர் இல்லத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை! காலையிலேயே கடுப்பான இபிஎஸ்!

0
70

சென்ற முறை அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் செந்தில்பாலாஜி இடம் தோல்வியை சந்தித்தார்.

இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென்று சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்திருக்கின்ற சாய் கிருபா குடியிருப்பில் அமைந்திருக்கின்ற எம்.ஆர். விஜயபாஸ்கர் சொந்தமான வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களும், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்து கையொப்பமிட்ட ஆவணங்களும், கிடைப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

அத்துடன் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது நடைபெற்ற பிரச்சாரத்தில் திமுகவின் வேட்பாளராக கரூரில் களமிறக்கப்பட்ட செந்தில்பாலாஜி எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதிலும் குறிப்பாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல ஆவணங்களை செந்தில்பாலாஜி வெளியிட்டார்.

இந்த சூழ்நிலையில், கரூரில் இருக்கின்ற முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்களின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மதுரை மற்றும் கோயம்புத்தூர் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தற்சமயம் இந்த சோதனையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.அத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் திடீரென்று சோதனையில் ஈடுபட்டு வருவதால் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களின் இல்லத்திற்கு முன்னாள் அதிமுகவை சார்ந்த தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். அதேநேரம் காவல்துறையினரும் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் குவிந்து இருக்கிறார்கள்.