இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

0
64

இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்களான புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர். திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை பெரும்பாலும் இப்போது உள்ள வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், மற்ற  மாவட்டங்களை பொறுத்தவரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ளது.

வருகிற சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மற்ற  மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதன்படி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

author avatar
Parthipan K