பாமக இளைஞர் அணி தலைவர் நியமனத்தால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடா?

0
166
Dr Ramadoss and Anbumani Ramadoss
Dr Ramadoss and Anbumani Ramadoss

பாமக இளைஞர் அணி தலைவர் நியமனத்தால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடா?

ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரனுக்கு பாமக இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கியிருப்பது பாமகவினர் மத்தியில் ஒரு பிரிவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில் அதிமுக அல்லது திமுக என மாறி மாறி எதிர்க்கட்சியாக இருந்தாலும் தங்களுடைய செயல்பாடுகள், அறிக்கைகள் மற்றும் போராட்டங்கள் மூலம் பாமக சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக 5 சதவீத வாக்கு வங்கியை தொடர்ந்து பெற்று வருகிறது. இதுமட்டுமில்லாமல் வட தமிழகத்தில் உள்ள 40 முதல் 60 மாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவிற்கு வாக்கு வங்கியை கொண்ட கட்சியாக பாமக உருவாகியுள்ளது.

அந்த வகையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள கட்சியான பாமகவுக்கு தேர்தல் நேரத்தில் செல்வாக்கு அதிகமாகும். சட்டப்பேரவைத் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ எதுவாக இருந்தாலும் மற்ற கட்சிகளை விட முதலில் பாமகவை கூட்டணியில் சேர்க்கவே திமுக, அதிமுக கட்சிகள்  முயற்சிகளை மேற்கொள்ளும்.

கடந்த காலங்களில் பாமக பங்கேற்கும் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று யூகிக்கும் அளவிற்கு அதன் செல்வாக்கு இருந்தது. தற்போது அந்த நிலைமை மாறினாலும் வட வடமாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவதால் பாமகவிற்கு இன்னும் அதே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

மற்ற கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தாலும் பாமக ஆரம்பித்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழகத்தில் அக்கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லையே என்ற ஆதங்கம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தான் கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் பாமகவை தமிழகம் முழுவதும் வலுப்படுத்தவும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியாக மட்டுமே நீடிக்காமல், கூட்டணியை உருவாக்கி தலைமை தாங்கும் கட்சியாக மாற்றும் வகையில் பாமகவை வலுவாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் அன்புமணி ராமதாஸ் எடுத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பாமக தலைவராக பொறுப்பேற்று கொண்ட அன்புமணி ராமதாஸ் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வியூகங்களையும் வகுத்து வருகிறார். இதற்காக, மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள பொதுமக்களையும் பழைய நிர்வாகிகளையும் வருகிறார்.

கட்சியினர் மத்தியில் சலசலப்பு

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் இதற்கு முன் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவியை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜி.கே.எம்.தமிழ்க்குமரனுக்கு வழங்கப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி பாமக தலைவராக பதவியேற்ற பின்னர் அவருடைய இளைஞர் அணி தலைவர் பதவி யாருக்கு வழங்கப்படும் என தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு நிலவியது.

இதில் அடுத்த இளைஞர் அணி தலைவர் பதவி இவருக்கு தான் என சில முக்கிய நிர்வாகிகளின் பெயரும் யூகமாக பேசப்பட்டது. இந்நிலையில் கட்சியினர் யாருமே எதிர்பார்க்காத ஜி.கே.எம்.தமிழ்க்குமரனுக்கு இந்த பதவியை வழங்கியுள்ளது கட்சியின் ஒரு சாரார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

G K M Tamil Kumaran
G. K. M. Tamil Kumaran

பாமக தலைவராக இருந்து கவுரவத் தலைவராக பதவி வகிக்கும் ஜி.கே.மணியின் மகன் தான் தமிழ்க்குமரன். ஜி.கே.எம்.தமிழ்க்குமரனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவியை வழங்கும் இந்த நியமனத்தை மருத்துவர் ராமதாஸ் தன்னிச்சையாக செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் மேலும் இந்த நியமனமானது மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கி உள்ளதாகவும்கூறப்படுகிறது. அதே போல் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிறகு  கட்சியின் எந்தப் பணியிலும் ஆக்டிவாக  ஈடுபடாத தமிழ்க்குமரனை இப்பதவியில் நியமித்திருப்பது கட்சியின் ஒரு தரப்பினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அக்கட்சியினர் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வழக்கமாக மருத்துவர் ராமதாஸ் அவர்கள் எடுக்கும் முடிவுக்கு பெரும்பாலும் எதிர்ப்பு குரல் வருவது குறைவு. ஆனால் இந்த விவகாரத்தில் கட்சியின் தீவிர ஆதரவாளர்களே இந்த முடிவை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அவர்கள் தெரிவித்ததாவது, பாமகவில் இளைஞர் அணி தலைவர் பதவி முக்கியமானது. கட்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல கட்சித் தலைவர் என்ற முறையில் அன்புமணி பெரும் முயற்சி எடுத்து வருகிறார். குறிப்பாக, பாமக மீதுள்ள சாதிக்கட்சி என்ற அடையாளத்தை உடைத்து, அனைத்து சாதிகளுக்கான பொதுவான கட்சி பாமக என்ற நிலையை உருவாக்க பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் 2026 இல் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் பாமக 2.0 என்ற செயல் திட்டத்தை வகுத்து புதிய வேகத்துடன் செயல்பட்டும் வருகிறார். இதற்காக மாவட்டம் தோறும் பயணம் செய்து கட்சியினரை சந்தித்து வருகிறார்.

இந்த நேரத்தில் கட்சியில் ஆக்டிவாக இல்லாத தமிழ்க்குமரனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவியை வழங்கியிருப்பது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அவர் தற்போது லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் முழுநேர தலைமை அதிகாரியாக உள்ளார். அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிறகு எப்போதும் கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்றதில்லை.

ஜி.கே.மணியின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக பதவி வழங்கியிருப்பது தவறானது. கட்சிக்காக இரவு பகல் பாராமல் உழைப்பவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு அப்பதவியை வழங்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாமகவின் இளைஞர் அணி தலைவராக இருந்த அன்புமணி, கடந்த மே மாதம் இறுதியில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணி கவுரவத் தலைவரானார். தற்போதைய சட்டப்பேரவை பாமக தலைவராகவும் ஜி.கே.மணி உள்ளார்.

கட்சியில் கவுரவத்தலைவர் பதவி என்பது முக்கியத்துவம் இல்லாத பதவியாகவே இருப்பதாலும், ஆரம்ப காலத்திலிருந்து கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததாலும், அவரது மகன் தமிழ்க்குமரனுக்கு கட்சியில் இளைஞர் அணி தலைவர் பதவியை ராமதாஸ் கொடுத்திருக்கலாம் என்றும் மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவர்கள் கருத்தை விட தலைமையில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே இதனால் கருத்து வேற்றுமை உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.