சுலைமானி கொலைக்கு பழிவாங்குவோம் ; ஈரானின் புதிய தளபதி அதிரடி

0
80

ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்கா  நடத்திய  வான்வழி  தாக்குதலில், ஈரானின் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவரான ராணுவ தளபதி  குவாசிம்  சுலைமானி  கொல்லப்பட்டார்.  இந்த தாக்குதலில்,  அவருடன்  ஈராக்  துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ்  உட்பட 6  பேரும் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், மத்திய கிழக்கு  நாடுகளில் பதற்றம்  அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஈரானின் புரட்சிகர  ராணுவ  தளபதியாக, குவாசிம் சுலைமானிக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்மெயில் கானி  பொறுப்பேற்றுள்ளார். குவாசிம் சுலைமானி அமெரிக்கா வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டது  குறித்து  பேசிய  இஸ்மெயில் கானி, “சுலைமானி  கொல்லப்பட்டதற்கு பழி தீர்ப்போம்” என்று கூறினார்.

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று ஈராக்  பாராளுமன்றம் கேட்டுக்கொண்டுள்ள  நிலையில், ஈரானின்  புதிய ராணுவ தளபதி  மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையே, 2015 போடப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தில்  எஞ்சியிருந்த  நிலுவைகளையும்  கைவிடப்போவதாக  ஈரான் தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களை  தயாரிக்கும்  வாய்ப்பு உருவாகியுள்ளது.

மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈராக்கில் இருந்து அமெரிக்க  படைகளை  வெளியேற்றினால், பல பில்லியன் டாலர்கள் இழப்பீடாக  ஈராக்  தர வேண்டியிருக்கும். அவ்வாறு தர மறுக்கும்  பட்சத்தில், ஈராக்கிற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார  தடைகள்  விதிக்கப்படும் என்று  மிரட்டல்  விடுத்துள்ளார்.

author avatar
Parthipan K