வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு! இன்று முக்கிய முடிவை எடுக்கும் சென்னை உயர்நீதிமன்றம்!

0
69

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அதற்காக போராட்டத்தை முன்னெடுத்து வந்தது.பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் அந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து வன்னியர்களுக்கு பல விஷயங்களை செய்து வருகிறது.

அதில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது இட ஒதுக்கீடு கோரிக்கை கடந்த 1987 ஆம் வருடம் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன போராட்டத்தின் முடிவில் இருபத்தொரு வன்னிய இளைஞர்கள் உட்பட காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் .முடிவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி வன்னியர் ஜாதியையும் சேர்த்து 108 ஜாதிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார்.

ஆனாலும் இந்த இட ஒதிக்கீடு வன்னியர்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கவில்லை. அதன்பின்னர் பல சமயங்களில், பல இடங்களில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருணாநிதியை விமர்சனம் செய்து கருணாநிதி வன்னியர் இன மக்களையும், எங்களையும் ஏமாற்றி விட்டார் என்று தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், ஆரம்ப காலத்தில் இருந்து இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து வந்திருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சி சென்ற வருடம் அதற்காக ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது. இதன் காரணமாக அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பாமகவை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தினார். முடிவில் வன்னியர்களுக்கான தனி உள் இட ஒதுக்கீடு வழங்கினார். அதாவது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி அரசாணை வெளியிட்டார்.

இதற்கு முன்பாகவே அது தொடர்பான சட்ட முன்வடிவை சட்டசபையில் தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் காலதாமதம் செய்ததால் உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டது. இதனை கண்ட ஆளுநர் உடனடியாக அந்த சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் வழங்கினார். இதனால் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள் இந்தநிலையில், 10.5% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று தன்னுடைய முடிவை அறிவிக்க இருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதை எதிர்த்து 25க்கும் அதிகமான வழக்குகள் போடப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் ,கண்ணம்மாள், அமர்வில் மறுபடியும் விசாரணைக்கு வந்தது அந்த சமயத்தில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் நடைபெறும் நியமனங்களை தடுக்கும் விதத்தில் சட்டத்திற்கு தடை விதிக்குமாறு மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசு தரப்பில் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து பதில் மனு தாக்கல் செய்யப் பட்டிருப்பதாக உள் இட ஒதுக்கீட்டால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்ற காரணத்தால், தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து இடைக்கால கோரிக்கை மீதான வாதங்களை இருதரப்பு பிரிவினரும் இன்று முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இறுதிகட்ட விசாரணைக்கான தேதி தொடர்பாக இன்றைய தினம் முடிவெடுத்து அறிவிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.