தமிழ்நாட்டில் வேளாண் சட்டமசோதாவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! கைதாகும் அப்பாவிகள்!

0
65

மாநிலங்களவையில் எதிர்க்கட்சியின் எதிர்ப்பையும் மீறி 3 வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இந்த வேளாண் சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

வட மாநிலங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் விவசாயிகள் சங்கங்கள், அரசியல் இயக்கங்கள் போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நேரு தலைமையிலான போராட்டத்தில் சட்ட நகல் எடுத்தது தொடர்பாக 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரமேரூரில் 28 பேரும், மதுராந்தகத்தில் 270 பேரும், செய்யூரில் 63 பேரும், செங்கல்பட்டில் 52 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருத்தணி புறவழிச் சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் கைதாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற மறியலில் விவசாய சங்கங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
Parthipan K