தமிழக மக்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை! இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை!

0
140

தமிழக மக்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை! இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை! 

தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கை கடற்கரையை நெருங்கி பின்னர் நாளை அதிகாலை தென்கிழக்கு இலங்கை கடற் பகுதியை காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் திரிகோணமலைக்கு தென்மேற்கில் 455 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலுக்கு தென்மேற்கில் 680 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நிலவி வருகின்றது. தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற் பகுதியை நெருங்கி அதன் பின்னர் தெற்கு இலங்கை கடற்கரை பகுதியை நோக்கி நகரும் எனவும் தெரிகிறது. காரணமாக தமிழகத்தில் நாளை பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாளை தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நாளை முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் இதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது.