பணிகளுக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு அறிவித்த புதிய உத்தரவு

0
111
Indian Govt allowed Migrant workers to move to hometown
Indian Govt allowed Migrant workers to move to hometown

பணிகளுக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு அறிவித்த புதிய உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர பஸ், ரயில் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக சொந்த ஊரைவிட்டு சென்று பல்வேறு மாநிலங்களிலும் வேலை செய்து வரும் பெரும்பாலான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் இந்த நேரத்தில் தவித்து வருகின்றனர். அவர்களை போலவே பிற மாநிலங்களில் தங்கி படிக்க சென்ற மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அங்கேயே போதுமான வசதிகளின்றி தவித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கட்டிட பணி உள்ளிட்ட வேலைகளை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் ஆந்திரா, கர்நாடகம் மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இது போல ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆங்காங்கே சிறப்பு முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். இங்கிருந்து அரசின் கட்டுப்பாடுகளை மீறி தங்களது சொந்த மாநிலத்துக்கு செல்ல முயற்சிக்கும் தொழிலாளர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

இவ்வாறு வெளிமாநில தொழிலாளர்களை நீண்ட நாட்கள் இது போன்ற முகாம்களில் தங்க வைக்காமல் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. ஏற்கனவே இந்த பிரச்சினை தொடர்பாகஉச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது .

இதுபோன்ற தற்காலிக முகாம்களில் வெளிமாநில தொழிலாளர்களை ஒரு மாதத்துக்கும் மேலாக வைத்து பராமரிப்பது என்பது ஒவ்வொரு மாநில அரசுக்கும் பெரும் பிரச்சினையாக உருவாகி வருவது மட்டுமில்லாமல், அவர்களுக்கு கூடுதல் நிதிச்சுமையும் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அவர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தியது.

இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருக்கும் தங்கள் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை திரும்ப அவர்களது மாநிலத்திற்க்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தி வைத்து பராமரிப்பதில் மீண்டும் ஒவ்வொரு மாநில அரசுக்கு பிரச்சினை உள்ளது. இதனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த விவகாரத்தை எப்படி கையாளுவது என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

COVID-19 UP Lockdown: UP To Bring Back Migrant Workers From Other ...

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கிதவித்து வருகின்றனர். தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அவர்களை அனுமதிக்க வேண்டும். இதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தனி அதிகாரிகளை நியமித்து, அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தங்கள் மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்து, அவர்களில் யார்-யாரெல்லாம் சொந்த ஊர் செல்ல விரும்புகிறார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டு அறியவேண்டும்.

அவர்களில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாதவர்களை மட்டும் பேருந்துகளில் ஏற்றி அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பேருந்துகளில் தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து, குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்கள் பயணம் செய்யும் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அந்தபேருந்துகள் பல்வேறு மாநிலங்கள் வழியாகவும் தடையின்றி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களை அனுப்பி வைக்கும் முன்னால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமும் இதுபற்றி கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு அனுப்பப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தை சென்று அடைந்ததும், அங்குள்ள அந்த மாநில சுகாதார அதிகாரிகள் அவர்களை முறையாக பரிசோதித்து அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அதற்கான வாய்ப்பு இல்லையென்றால் அவர்களை மொத்தமாகவும் தனிமைப்படுத்தி வைக்கலாம். அவ்வப்போது அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனையும் நடத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இவ்வாறே கொரோனா வைரஸ் பாதிப்பினால் பெரும்பாலான உலக நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ள ஏராளமான இந்தியர்கள் அங்கிருந்து தங்களுடைய தாய்நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். இது தொடர்பாகவும், கொரோனா பாதிப்புகள் குறித்தும் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நயான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, மே 3 ஆம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு வளைகுடா நாடுகளுக்கு இந்திய கடற்படை கப்பல்கள், விமானங்கள் மற்றும் ராணுவ சரக்கு விமானங்களை அனுப்பி, அங்கு தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன

வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களை அழைத்து வர தங்கள் தளங்களை தயாராக வைத்திருக்குமாறு விமானப்படை, கடற்படைகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டு இருப்பதாகவும், இவ்வாறு வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வந்த பின்னர் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிந்து விட்டால், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களையெல்லாம் உடனடியாக மீட்டு இந்தியா அழைத்து வருவதில் தாமதம் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

author avatar
Parthipan K