கோலியைப் பற்றி கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்களிடம் சீரிய ரோகித் சர்மா!

0
56

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியாவிடம் பறிகொடுத்தது. இதனை தொடர்ந்து 3 ஆட்டங்களில் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவிருக்கிறது. அதன் அடிப்படையில், இந்தியா, மேற்கிந்திய தீவுகள், அணிகளுக்கிடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறவிருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி 20 ஓவர் தொடரிலும் தன்னுடைய முழு பலத்தையும் வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் வியூகங்களை அமைத்து வருகிறது.

இன்னும் 8 மாத காலத்தில் ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியின் சரியான வீரர்களை அடையாளம் காண்பதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த போட்டி பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் விலகிவிட்டபடியால் ரோகித் சர்மாவுடன் இஷன் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார் என்று சொல்லப்படுகிறது.

சுழற்பந்து வீசும் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் தசைப்பிடிப்பு காரணமாக, விலகியிருப்பதால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது புதுமுக வீரர் ரவி உள்ளிட்டோர் சேர்க்கப்படலாமென்று தெரிகிறது. மற்றபடி இந்திய அணி வலுவாகத்தான் இருக்கிறது என சொல்லப்படுகிறது.

ஆனாலும் ஒருநாள் தொடரில் ரன்கள் சேர்க்காமல் ஏமாற்றமளித்த விராட் கோலி இன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலாவது ரன் வேட்டையை தொடங்குவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இன்னும் 73 ரன்கள் எடுத்தால் விராட்கோலி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்டில்லை முந்திவிடுவார் என்று சொல்லப்படுகிறது. அவர் சுமார் 3299 ரன்களை சேர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய அளவில் சவாலாக இருப்பதற்கான வாய்ப்பில்லை என்பதால் இந்தியாவின் பக்கம் தான் ஆட்டமிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

மேலும் தற்போது விளையாடவிருக்கும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சற்றே ஒத்துழைப்பு தரக்கூடிய நிலையிலிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இரவில் போகப்போக பணி பொழிவின் தாக்கம் அதிகமாகும் என்பதால் 2வதாக பந்து வீசுவதற்கு கடினமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது.

இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சுக்கு உரிமை கோரலாம். இந்த இரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இதுவரையில் 17 முறை நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் 10 போட்டிகளில் இந்தியாவும், 6 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும், வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முடிவெதுவும் அறியப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்யவிருக்கிறது.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் விராட் கோலி இவர் சர்வதேச போட்டிகளில் சதம் கண்டு 2 வருடத்திற்கு மேல் சென்று விட்டது. சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 ஆட்டத்தில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாற்றத்துடன் அவர் இருந்து வந்தார்.

அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. எனவே இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் நேற்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் தெரிவித்த ரோகித் சர்மா கோலியை பற்றி தேவையில்லாமல் விவாதிப்பதை நீங்கள் நிறுத்தினாலே அனைத்தும் சரியாகிவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவரைப் பொறுத்தவரையில் மனதளவில் நன்றாகவே இருக்கிறார். 10 வருடத்திற்கு மேலாக சர்வதேச அணியில் அங்கம் வகித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு அதிக நேரத்தைச் செலவிடும் அவருக்கு நெருக்கடியான தருணங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது நன்றாக தெரியும்.

ஆகவே நீங்கள் சற்று அமைதியாக இருந்தாலே அனைத்தும் சரியாகிவிடும் என்று தெரிவித்தார். விராட்கோலியிடம் நம்பிக்கை குறைவாகவுள்ளதா என்று கேட்ட சமயத்தில் நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? என்று மிகவும் காட்டமாக திருப்பி கேட்டிருக்கிறார் ரோகித் சர்மா.

அணியின் பரிசோதனை முயற்சிகளுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்புள்ள வீரர்களுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். என்று மற்றொரு கேள்விக்கு அவர் பதில் தெரிவித்திருக்கிறார்.