தமிழக மீனவர்கள் கைது விவகாரம்! உடனடியாக களத்தில் இறங்கிய இந்திய தூதரக அதிகாரிகள்!

0
106

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக வாடிக்கையாகிவிட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு எத்தனை முறை மத்திய அரசிடம் முறையிட்டாலும், பெரிய அளவில் மத்திய அரசு தமிழக மீனவர்கள் தொடர்பாக கண்டுகொள்வதில்லை.

தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் தேடி கடலுக்குள் சென்று தங்களுடைய உயிரையும் துச்சமென மதித்து மீன் பிடிக்கச் சென்றால் அங்கே இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் போய்விடும்.

இந்தநிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 18ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 43 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள். அடுத்த நாளே மேலும் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள், இந்த சூழ்நிலையில் 20ஆம் தேதி புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள், மூன்று நாட்களில் ஒட்டுமொத்தமாக 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.

இதன் காரணமாக, அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்து புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று தங்கச்சிமடம் அரசு பேருந்து நிறுத்தம் எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள் இவர்களுடைய போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

இதன் காரணமாக சுமார் 800 க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மீனவர்கள் மீது பயமுறுத்தும் தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதை உடனடியாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், கைதான தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் எனவும், நேற்று இரண்டாவது முறையாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தை திமுகவின் மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு மத்திய அமைச்சரிடம் நேரில் வழங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மிக விரைவில் விடுதலை செய்வது குறித்து இலங்கை அரசுடன் கொழும்பில் இருக்கின்ற தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்திய தூதரக உயர் அதிகாரிகள் காவலில் வைக்கப்பட்டிருந்த மீனவர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான எல்லா விதமான உதவிகளையும் செய்து வருகிறார்கள். அவர்களுடைய உறவினர்களுடன் பேசுவதற்கு தொலைபேசி வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கின்றன.

ஒரு மீனவருக்கு உடல்நலக்குறைவு உண்டாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரையும் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து நலம் விசாரித்தார்கள் .மீனவர்கள் மற்றும் அவர்களுடைய படகுகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்.