ஆஸ்திரேலியா வேகத்தில் சுருண்டது இந்தியா! 255 ரன்களுக்கு ஆல் அவுட் !!

0
86

ஆஸ்திரேலியா வேகத்தில் சுருண்டது இந்தியா!  255 ரன்களுக்கு ஆல் அவுட் !!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.  அதன் முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.  இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.  இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 10 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் வந்த ராகுல் தொடக்க ஆட்டக்காரர் தவானுடன் கைகோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 123 ரன்களை சேர்த்தனர். அரைசதத்தை நெருங்கிய லோகேஷ் ராகுல் 47 ரன்களில் எதிர்பாராதவிதமாக அவுட்டானார்.

அதற்கடுத்து வந்த கோஹ்லி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இடையில் அரைசதம் அடித்து நல்ல நிலையிலிருந்த ஷிகர் தவானும் 74 ரன்களில் அவுட் ஆக இந்திய அணி 164 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் வந்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறிது நேரம் நிலைத்து நின்று முறையே 28 மற்றும் 25 ரன்கள் சேர்த்தனர்.  இதனால் இந்திய அணி ஓரளவு கௌரவமாக ஸ்கோரை எட்ட முடிந்தது. அவர்கள் இருவரும் அவுட் ஆனதும் வந்த பந்து வீச்சாளர்கள் வரிசையாக ஆட்டமிழக்க இந்தியா 49.1 ஓவரில் 255 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் வேகத்தில் ரன்களை சேர்க்க முடியாமல் இந்திய ரசிகர்களை ஏமாற்றியுள்ளது இந்திய அணியின் பவுலிங் வலுவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்தியாவால் இந்த போட்டியில் வெல்ல முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.

author avatar
Parthipan K