குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு! அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை!

0
54

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்வதிலுள்ள சிக்கல் தொடர்பாக திமுகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆதார் எண் இணைக்கப்பட்டு விரல்ரேகை சரிபார்ப்பின் மூலமாக பொருட்களை வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இதனடிப்படையில், ரேஷன் அட்டையிலுள்ள உறுப்பினர்கள் யாராயினும் வந்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாக ரேஷன் கடைகளை அணுகி பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும், அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

பிரதிநிதிகளை நியமனம் செய்வதற்கான படிவங்கள் ரேஷன் கடைகளிலும், உணவு துறையின் பிரத்தியேக இணையதளத்திலும், வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கின்றனர். அதனை நிரப்பி விண்ணப்பம் செய்து பிரதிநிதிகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.

தமிழகத்திலுள்ள 2,39,803 அங்கீகரிக்கப்பட்ட குடும்ப அட்டைகளில் 98.23 சதவீத அட்டைகளுக்கு கைரேகை சரிபார்ப்பின் மூலமாக பொருட்கள் வழங்கப்படுகின்றது என தெரிவித்திருக்கிறார். கைரேகை மற்றும் மற்ற பிரச்சனைகள் அவ்வப்போது வந்தவண்ணம் இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா, தெலுங்கானா, அசாம், போன்ற மாநிலங்களில் கண் கருவிழி சரிபார்ப்பின் மூலமாக செயல்படுத்தப்படும் நடைமுறை ஏற்கனவே இருக்கிறது எனவும், இதனடிப்படையில் தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் 2 இடங்களில் சோதனையினடிப்படையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறியிருக்கிறார்.

இந்தத் திட்டம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் எனவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.