தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

0
103

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட 3 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

தமிழ்நாடு ,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட, மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், கோவை மாவட்டத்தில் இருக்கின்ற வால்பாறை வட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மழையின் காரணமாக முக்கிய நதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து இருக்கிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை, போன்ற இடங்களில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்ற ஆணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி அளவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 16 அடியும் அதிகரித்திருக்கிறது. மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு, போன்ற அணைகளுக்கும், நீர்வரத்து தற்போது அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அந்த கனமழைக்கு இதுவரையில் 12 பேர் பலியாக இருக்கிறார்கள் என்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட 3 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கோவை. திருப்பூர், திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மற்றும் உட்புற கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.