சாலையின் பெயர் பலகைகளில் இனி இவற்றை செய்தால் அபராதம் மாநகராட்சி விடுத்த எச்சரிக்கை! 

0
131

சாலையின் பெயர் பலகைகளில் இனி இவற்றை செய்தால் அபராதம் மாநகராட்சி விடுத்த எச்சரிக்கை! 

சாலைகளின் பெயர் பலகைகளில் இனிமேல் நோட்டீஸ் ஒட்டினாள் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அதன் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பஸ் நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களில்   சுவரொட்டிகள், மற்றும் நோட்டீஸ்  போன்றவற்றை ஒட்டி மாநகரின் அழகினை சீர்குலைத்து வருகின்றனர். இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு, இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னை மாநகராட்சி மற்றும் அதற்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சுவரொட்டி ஒட்டிய நபர்கள் மீது ஒரு லட்சத்து 36 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 340 பேர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் சென்னை மாநகரின் சாலைகளின் பெயர் பலகைகள்,  அறிவிப்பு பலகைகள், மற்றும் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.