முகம் சுளிக்க வைத்த வங்கதேச வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டம்:ஐசிசி நடவடிக்கை எடுக்குமா?

0
67

முகம் சுளிக்க வைத்த வங்கதேச வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டம்:ஐசிசி நடவடிக்கை எடுக்குமா?

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள் இந்திய வீரர்களை சீண்டும் விதமாக நடந்து கொண்டது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு மாதமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இதில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி எளிதாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அதேப்போல வங்கதேசமும் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் அனைவரும் சொதப்ப ஜெய்ஸ்வால் மட்டுமே அதிகபட்சமாக 88 ரன்களை சேர்த்தார். அதன் பின்னர் ஆடிய வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தாலும் ஒருவழியாக போட்டியை வென்று முதல் முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.

கோப்பையைக் கைப்பற்றிய கொண்டாட்டத்தில் ஓய்வறையில் இருந்த வீரர்கள் அனைவரும் மைதானத்துக்குள் ஓடிவந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது அவர்களின் செய்கை இந்திய வீரர்களை சீண்டும் விதமாகவும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாகவும் இருந்தது. இதையடுத்து இதை ஐசிசியின் கவனத்துக்கு கொண்டு சென்றது பிசிசிஐ. இதையடுத்து ஐசிசி வங்கதேச வீரர்களுக்குக் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

இது சம்மந்தமாகப் பேசிய வங்கதேச கேப்டன் அக்பர் அலி ‘வெற்றி பெற்ற உற்சாகத்தில் எங்கள் வீரர்கள் செய்த செயலுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,கிரிக்கெட் எப்போதுமே ஜெண்டில் மேன்களின் விளையாட்டு. எதிரணி வீரர்களை மதிக்க வேண்டியது ஒவ்வொரு வீரரின் கடமை’ எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் ஐசிசி அவர்களின் மன்னிப்பை ஏற்குமா அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

author avatar
Parthipan K