மாஸ்க் போட மாட்டேன்… அடம்பிடித்த பயணி! தரையிறங்கிய விமானம்!!

0
72

மாஸ்க் போட மாட்டேன்… அடம்பிடித்த பயணி! தரையிறங்கிய விமானம்!!

உலகளவில் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவிலும் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதிலும் மற்ற மாகாணங்களை காட்டிலும் நியூயார்க், வாஷிங்டன், உள்ளிட்ட மாகாணங்களில் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

எனவே கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் 2-வது, 3-வது அலைகளாக பரவும் கொரோனா வைரஸ், கடுமையான பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. அதிலும் அமெரிக்காவில் 4-வது அலையை கடந்து கொரோனா தொற்றின் பாதிப்பு சென்று கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள அனைத்து நாடுகளும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் மற்றும் முகக்கவசம் அணியவும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து லண்டன் நோக்கி நேற்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் ஒரு பயணி, முக கவசம் அணிய மறுத்துள்ளார். விமான பணியாளர்கள் எடுத்துக் கூறியும் அந்தப் பயணி கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த பயணி எவ்வளவு கூறியும் அதை கேட்காமல் தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்துள்ளார்.

எனவே விமானி உடனடியாக விமானத்தை மியாமி விமான நிலையத்திற்கு திருப்பினார். மியாமி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி பெற்றார். விமானம் தரையிறங்கியதும், முக கவசம் அணிய மறுத்த அந்த பயணியை போலீசார் கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரது பயண அனுமதியும் ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

author avatar
Parthipan K