ஆதிதிராவிடர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு! இதுத்திட்டமிட்ட செயலா?

0
170

ஆதிதிராவிடர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு! இதுத்திட்டமிட்ட செயலா?

ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் புதுக்கோட்டை அருகே அரங்கேறியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவாசல் கிராமத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது.இதனால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குடிநீர் சுகாதாரமானதாக இல்லாத காரணத்தினால் தான் இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஊரில் உள்ள மக்கள் மேல்நிலைத் தொட்டியை பார்த்தபோது அதில் இயற்கை உபாதை மலம் கழிக்கபட்டிருப்பது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் உடனடியாக வருவாய் துறை அதிகாரிக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அன்னவாசல் வட்டாட்சியர் அலுவலர் ஆனந்தன்,
வெள்ளனூர் காவல்துறை அதிகாரிகள்,கொளத்தூர் தாசில்தார் சக்திவேல், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, ஆகியோர் அந்த கிராமத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர்.

அதிகாரிகள்,அந்த மேல்நிலை நீர் தொட்டியில் இயற்கை உபாதை கலந்திருப்பது உறுதி செய்தனர். பின்பு சுமார் 10,000லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர்.மேலும் குளோரின் பவுடர் மூலம் தொட்டி இரண்டு முறை சுத்தம் செய்யப்பட்டது.
மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் நிரப்பிய பிறகு அதனை குடிநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு முடிவுகள் வந்த பிறகு மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என்றும் கூறினர்.மேலும் தற்காலிக நடவடிக்கையாக அம் கிராம மக்களுக்கு பிளாஸ்டிக் நீர் தொட்டி அமைத்து நீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் வசிக்கும் கிராமத்தில் திட்டமிட்டேன் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டு இருக்கிறது.இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுபவர்கள் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக அந்த கிராமத்தில் தண்ணீர் வசதி இல்லாமல் பல போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2016 – 17 ஆம் நடைபாண்டில் தான் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.
தொட்டியின் மேல்முடி சிறியவர்கள் திறப்பது கடினம்.எனவே இந்த செயல் திட்டமிட்டே தான் நடைபெற்றிருக்கிறது என்று அந்த கிராம மக்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

author avatar
Pavithra