மூன்று நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

0
161

மூன்று நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். பர்தா, காவி துண்டு அணிந்து வந்த மாணவர்களை வகுப்பறைக்குள் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இதேபோன்று சிவமொக்கா, பாகல்கோட்டை, பெலகாவி, விஜயாப்புரா, மண்டியா உள்பட 10 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள், பர்தா மற்றும் காவி துண்டு அணிந்து வந்தனர். அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது.

இதனை எதிர்த்து மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தின் வளாகம் மற்றும் நுழைவுவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம், கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து அனைவரையும் வெளியேற்றியது. மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க கல்லூரி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விஜயாபுரா மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு மாணவர்கள் பர்தா, காவி துண்டு அணிந்து வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. கல்லூரி பேராசிரியர்கள் அவர்களிடம் எடுத்து கூறியும் மாணவர்கள் அதனை கேட்கவில்லை. இதனால் கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது.

ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், கர்நாடகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு  அனைத்து பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K