இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் வரலாறு எப்போதும் மன்னிக்காது! பாஜகவிற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பு கடும் எச்சரிக்கை!

0
93

ஆர் எஸ் எஸ் பாஜக போன்ற சங்பரிவார் அமைப்புகளின் மாநில அளவில் 2 தினங்கள் முகாம் சென்னை அண்ணா நகரில் 26 மற்றும் 27 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற்றது. ஹைடெக் என்று அழைக்கப்படும் இந்த முகாமில் ஆர்எஸ்எஸ் இணை பொது செயலாளர் மன்மோகன் வைத்யா, தென்னிந்திய தலைவர் வன்னிய ராஜன், செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டனர்.

மேலும் அமைப்பாளர் செந்தில், மாநில அமைப்பாளர்கள் ரவிக்குமார், ஆறுமுகம், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி, சட்டசபை பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன் போன்றோர் பங்கேற்றனர்.

முதல் நாளான கடந்த சனிக்கிழமை பாஜக போன்ற அமைப்புகளின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கடந்த ஒரு ஆண்டுகளில் சாதித்ததை, சந்தித்த சவால்கள் தொடர்பாகவும், அடுத்த ஒரு வருடத்தில் திட்டமிட்டு இருக்கின்ற செயல் திட்டங்கள் தொடர்பாகவும் அறிக்கை வழங்கினர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணை பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா பேசியதாவது, சங்பரிவார் அமைப்புகள் எல்லாம் ஆர்எஸ்எஸ் என்ற தாயின் குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையும் தனித்து சாதிக்க வேண்டும் என்பதுதான் தாயின் விருப்பமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று ஒவ்வொரு அமைப்பும் தமிழ்நாட்டில் வலுவாக இருக்க வேண்டும். அதில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் என்ற தாயின் விருப்பம். சில அமைப்புகள் பெயரளவில் மட்டுமே செயல்படுகின்றன. அந்த நிலை முற்றிலுமாக மாற வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இயக்கங்கள் என்ன தான் பெரிதாக வளர்ந்தாலும் மாநிலத்தில் அரசியல் அதிகாரம் இல்லாமல் எதையும் சாதிக்க இயலாது. அதற்கு கர்நாடக மாநிலம் ஒரு சிறந்த உதாரணம், ஆகவே தமிழகத்திலும் அரசியல் அதிகாரத்தை நாம் பெறுவதற்கு எல்லா அமைப்புகளும் உதவிகரமாக இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

அத்துடன் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, கேசவ விநாயகம், வானதி போன்ற பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் அவர் தனியாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அந்த சமயத்தில் தனிமனித ஒழுக்கம் சார்ந்து வெளியாகும் செய்திகள் தனி மனிதர்களை மட்டுமல்ல இயக்கத்தையும் சேர்ந்தே பாதிக்கும். இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

சென்ற சட்டசபை தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆளுங்கட்சியான திமுகவின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் வரலாறு நம்மை மன்னிக்காது என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டிய அவர், தமிழக அரசியல களத்தில் பாஜக ஒரு முக்கிய சக்தியாக இருப்பது மகிழ்ச்சி வழங்குகிறது. இது தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்க வேண்டும்.

நம்முடைய அரசியல் எதிரிகளும், சித்தாந்த எதிரிகளும் வலுவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லை கடந்த சக்திகளும் உதவி புரிந்து வருகின்றன. ஆகவே எச்சரிக்கையுடன் பணி புரிய வேண்டும் என்று அறிவுறுத்தியதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.