ஐயையோ அது வேணாவே வேணாம்! பாஜகவால் கதறும் திமுக!

0
89

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் தொடர்பான நாடாளுமன்ற குழு மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக ஹிந்தி மொழியை பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பதாக தமிழக முதல்வரும் திமுக தலைவர் ஆன ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.

அதோடு இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் என்று கட்டாயமாக தெரிவித்திருந்த நிலையில், இந்தி திணிப்பை வாபஸ் பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தும் திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய துணை கண்டத்தின் பன்முகத்தன்மையை சிதைக்கும் விதத்தில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்தியலை மத்திய பாஜக அரசு செயல்படுத்த முயற்சி செய்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி குறித்த நாடாளுமன்ற குழு வழங்கி உள்ள அறிக்கையில் மத்திய அரசு நடத்தும் ஐஐடி,ஐ ஐ எம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களான உயர் கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது இந்தி பேசத் தெரியாத மாநிலங்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதோடு மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு ஹிந்தியில் மட்டுமே தேர்வு நடத்தும் பரிந்துரையும் இருக்கிறது. இது இந்தியை படித்தால் மட்டுமே வேலை என்ற நிலையை ஏற்படுத்தி இந்தி பேசத் தெரியாத மாநிலங்களில் இருக்கின்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் மறைமுக சதித்திட்டமாக காட்சி தருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மொழி ஆதிக்கத்தை கொண்டு வரும் செயலின் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக் கொள்கை அமைந்திருப்பதை வன்மையாக எதிர்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை கொண்டு வரும் மத்திய அரசின் முடிவை வாபஸ் பெற வலியுறுத்தி வருகின்ற 15-ம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.