பல மாவட்டங்களில் கனமழை! அறுவடை பணிகள் பாதிப்பு!!

0
58

பல மாவட்டங்களில் கனமழை! அறுவடை பணிகள் பாதிப்பு!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த பருவமழை ஓய்ந்ததில் இருந்து தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது.

அதன்படி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இரவு நேரத்தில் கன மழை பெய்தது. தஞ்சையில் இன்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், காலை 8 மணி அளவில் பெய்த மழை சிறிது நேரம் நீடித்தது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதியில் நள்ளிரவு ஒரு மணி முதல் லேசான சாரல் மழை பெய்தது. விடியற்காலை 4 மணி முதல் மிக கனமழை பெய்து வருகிறது. தற்போது நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதியில் சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கன மழையில் சம்பா சாகுபடி பாதிப்பு அடைந்துள்ளது. இன்று நடைபெற இருந்த அறுவடை பணிகள் முற்றிலுமாக முடங்கிப் போய் உள்ளன.

நாகை மாவட்டத்தை பொறுத்தவரை வேதாரண்யம், நாகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்த திடீர் மழையால் அறுவடை பணி முடங்கிப்போய் உள்ளது.

author avatar
Parthipan K