நாளை நடைபெறும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம்! பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்ட தீர்மானங்கள்!

0
109

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரி மண்டபத்தில் நடப்பதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை 23 தீர்மானங்கள் கட்சியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் பன்னீர்செல்வத்திடம் அவருடைய ஒப்புதலுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தீர்மான குழு தயார் செய்த வரைவுத்தீர்மானத்தை அதிமுகவின் தலைமை அலுவலக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் நேரில் சந்தித்து வழங்கியிருக்கிறார்கள்.

அதேபோல கட்சியின் வரவு செலவு அறிக்கையை ஒருங்கிணைப்பாளரும் பொருளாளருமான பன்னீர்செல்வத்திடம் வழங்கியிருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு வருடமும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடும் போது வருட வரவு செலவு கணக்கை பொருளாளர் வாசிப்பார். அதனடிப்படையில், வரவு செலவு கணக்கு தொடர்பான தகவல்கள் தற்போது பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்களின் தலைமையில் நாளை நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

ஒற்றை தலைமை குறித்து கட்சிக்குள் 2 விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படும் நிலையில், நாளை பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வதற்கு வெளி நபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதோடு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் அருகே பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முதல்கட்டமாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.