அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல்! சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை!

0
67

கடந்த 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளரான வைத்திலிங்கம் உள்ளிட்டோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டனர்.

ஆனாலும் பொதுக்குழுவில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் பன்னீர்செல்வம் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. இதற்கு நடுவில் இந்த பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று இதற்கு முன்னதாகவே பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடி இருந்தார். ஆனால் நீதிமன்றமும் இந்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.

இந்த நிலையில், அன்று காலை 8 மணியளவில் தலைமை அலுவலகம் வந்த பன்னீர்செல்வம் தலைமை அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து கடப்பாரையைக் கொண்டு பூட்டப்பட்டிருந்த தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பல முக்கிய ஆவணங்களை அவர் கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அங்கே இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களை பன்னீர்செல்வத்துடன் வந்தவர்கள் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் இரு தரப்பினருமே காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆனால் இப்படி நடைபெற்ற கலவரம் அனைத்தையும் அங்கே கூடியிருந்த காவல்துறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இந்த நிலையில், தகவலறிந்து அந்த பகுதிக்கு வந்த அதிரடி படையை சேர்ந்தவர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன் பிறகு வருவாய்த்துறை ஆணையர் கோட்டாட்சியருக்கு விதித்த உத்தரவினடிப்படையில் அதிமுகவின் தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதன் பிறகு இந்த அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பதை சிவில் நீதிமன்றத்தில் உறுதி செய்து கொண்டு அதன் பிறகு வந்து சாவியை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து விட்டார்கள்.

இதனையடுத்து அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தனித்தனியே மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது.

ஆகவே இன்றைய விசாரணையின் முடிவில் இந்த அதிமுகவின் தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிச்சாமி வசனம் சொல்லுமா? அல்லது பன்னீர்செல்வம் வசம் செல்லுமா? என்று தமிழக மக்களும், அதிமுகவின் தொண்டர்களும், பரபரப்புடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.