இவ்வளவு நாளா ஏம்பா பார்க்க வரல? நாகப்பட்டினம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்!

0
92

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமியின் கோரத்தாண்டவம் காரணமாக, உறவுகளை இழந்து காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு, பட்டதாரியாகி தற்சமயம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ள பெண்ணை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் என்று திடீரென்று சந்தித்து பேசினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோரத்தாண்டவம் மாறிய சுனாமியின் காரணமாக நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றோராக மாறினர்.

கடந்த 2004 ஆம் வருடம் சுனாமி தாக்குதலின் போது கீச்சாங்குப்பம் கடலோரத்தில் அழுகுரல் கேட்ட மீனவர்கள் இரண்டு வயது குழந்தையை மீட்டு அப்போது மாவட்ட ஆட்சியர் ஆக இருந்த ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட இரண்டரை வயது குழந்தையையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர் இந்த இரு குழந்தைகளையும் அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்து பராமரிப்பதற்கு மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார்.

வேளாங்கண்ணியில் மீட்க்கப்பட்ட குழந்தைக்கு சௌமியா எனவும், கீச்சாங்குப்பத்தில் மீட்க்கப்பட்ட குழந்தைக்கு மீனா எனவும், பெயர் சூட்டினார் ராதாகிருஷ்ணன். இந்த இரு குழந்தைகளையும் தன் குழந்தைகளாக நினைத்து ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடைய மனைவி கிருத்திகா உள்ளிட்டோர் வளர்த்து வந்தாலும், காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 150 குழந்தைகள் மீதும் தனி கவனம் செலுத்தி வந்தனர்.

தங்களுடைய குழந்தைகளாகவே நினைத்து பெற்றோர்களைப் போல கவனித்துக் கொண்டதன் காரணமாக ராதாகிருஷ்ணனை அப்பா எனவும், அவருடைய மனைவி கிருத்திகாவை அம்மா எனவும், குழந்தைகள் அழைத்து வந்தனர். காப்பகத்திலிருந்த குழந்தைகள் வளர்ந்து திருமணமாகி போய்விட்டனர்.

ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு நாகப்பட்டினத்திற்கு வரும்போதெல்லாம் சௌமியாவையும், மீனாவையும், பார்த்துச் செல்வது திருமணமாகி பல்வேறு இடங்களில் வசிக்கும் காப்பகத்தில் வளர்ந்தவர்களிடம் ஏக்கத்தை உண்டாக்கியது.

இந்த நிலையில், கொட்டாய் மேடு என்ற மீனவ கிராமத்தில் சுனாமியால் பெற்றோரை இழந்து, அன்னை சத்யா ஆதரவற்ற காப்பகத்தின் பராமரிக்கப்பட்டு, தற்சமயம் வேளாங்கண்ணியை எடுத்த சிறுதூர் கிராமத்தில் திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசிக்கும் தமிழரசி வீட்டிற்கு நேற்றைய தினம் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜுடன் சென்றார்.

இதனை அறிந்த தமிழரசி தன்னுடைய கணவர் விஜயபாலன் என்பவருடன் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார். காரில் இருந்து ராதாகிருஷ்ணன் இறங்கியவுடன் சிறு குழந்தையை போல தமிழரசி ஓடிச் சென்று ராதாகிருஷ்ணனை இறுகப் பிடித்துக் கொண்டார். ஏம்ப்பா இத்தனை வருஷமா என்னை பார்க்க வரவில்லை என்று உரிமையுடன் கேள்வி கேட்டபடியே வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் தமிழரசி.

ராதா கிருஷ்ணன் வாங்கி வந்த பழங்களை ஆசையுடன் தமிழரசி வாங்கிக் கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பழைய நினைவுகளை பற்றி பேசிக்கொண்டதை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், டிஆர்ஓ சகிலா, உள்ளிட்டோர் அமைதியாக நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அதன் பிறகு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு தற்சமயம் மலர்விழி என்பவரின் பராமரிப்பில் தங்கி உள்ள மீனா, சௌமியா தரங்கம்பாடி கிராமத்தில் வசிக்கும் சாதனா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார் ராதாகிருஷ்ணன். பின்பு அவர்களுடனும் சற்று நேரத்தை செலவிட்டு மலரும் நினைவுகளுடன் கனத்த இதயத்துடன் ராதாகிருஷ்ணன் புறப்பட்டுச் சென்றார்.