கைத்தறி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்..!

0
155

கைத்தறி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்..!

ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் உள்பட பல்வேறு இடங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றது.இந்த பகுதியில் உள்ள கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு தேவையான பட்டு நூல் மற்றும் கச்சாப் பொருட்களை பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து கொள்முதல் செய்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை உற்பத்தியில் ஈரோட்டில் மட்டும் 60 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் பட்டு நூல் மற்றும் கச்சா பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பட்டு நூல் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரத்து 500 வரை விற்பனையாகி வருகிறது. இதனால் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். பல விசைத்தறியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டனர்.

இந்த நிலையில் சமீப காலமாக நூலின் விலைக்கு கூட உற்பத்தி செய்யப்பட்ட துணி விலை போகாததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இதையடுத்து விசைத்தறி உரிமையாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் இன்று முதல் வரும் 10-ந் தேதி வரை ரயான் துணி உற்பத்தியை நிறுத்தம் செய்ய முடிவு எடுத்தனர். இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு அவைகள் மூடப்பட்டுள்ளன.மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடோன்களும் மூடப்பட்டுள்ளன. இந்த உற்பத்தி நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிப்பு ஏற்படும். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும்.

இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுரேஷ் கூறியது கடந்த ஒரு மாதமாக ரயான் நூலின் விலை எவ்வித மாற்றம் இல்லாத போது 120 கிராம் எடை கொண்ட துணியின் விலை 15 நாட்களுக்கு முன்பு ரூ. 28 ஆக இருந்தது. இப்போது ரூ. 26-க்கு கூட மார்க்கெட்டில் விலைக்கு போகாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி விலையை விட மார்க்கெட்டில் ரயான் துணியின் விலையை குறைத்து கேட்கின்றனர். ரயான் துணிக்கு இணையாக காட்டன் துணியும் விலை குறைந்துள்ளதால் ரயான் துணி விற்பனை குறைந்துள்ளது. இதனால் மீட்டருக்கு 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை ரயான் துணி உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்தனர்.

author avatar
CineDesk