ஜி.எஸ்.டி. வரி முறைகேடு: திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் அதிகாரிகள் சோதனை

0
71

ஜி.எஸ்.டி. வரி முறைகேடு: திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் அதிகாரிகள் சோதனை

ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் முறைகேடு நடந்ததாக கூறி செங்கல்பட்டு திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வரலட்சுமி மதுசூதனன் இல்லத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

செங்கல்பட்டு தொகுதியில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தான் வரலட்சுமி மதுசூதனன். இவரது வீடு மறைமலை நகரில் அமைந்துள்ளது. இந்நிலையில் வரலட்சுமியின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென சரக்கு மற்றும் சேவைப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த ஆரம்பித்தனர். இதில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமியின் கணவர்  நடத்தி வரும் மேன் பவர் நிறுவனத்துக்கான ஜிஎஸ்டி வரியை முறையாகச் செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதேபோல கூடுவாஞ்சேரியிலுள்ள அவர்களுடைய அலுவலகம், ஆப்பூரில் உள்ள வீடு மற்றும் உறவினர்களின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமியின் கணவர் மதுசூதனனும், முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ.அன்பரசனும் மிகவும் நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. மதுசூதனன் தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பும் மேன் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனமானது காஞ்சிபுரம் பகுதியை சுற்றியுள்ள மோட்டார் நிறுவனங்கள், ஐடி பூங்காக்கள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பணியாளர்களை அனுப்பி வருகிறது.

ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள்,கோப்புகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சோதனை முழுவதும் முடிந்த பின்னரே முழுத் தகவலும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
Ammasi Manickam