குறைந்த விலைக்கு வாங்கி கொள்ளை லாபத்திற்கு விற்ற வியாபாரி : ஆட்சியர் கையும் களவுமாக பிடித்தது எப்படி?

0
123

சீனாவில் தொடங்கி பல நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிர்களை கொத்து கொத்தாக கொன்று வருகிறது. இதனால் பாரத பிரதமர் மோடி நாடு முழுவதும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

இதனால் மக்கள் வீட்டிலேயே இருந்தாலும் அத்தியாவசிய பொருட்களுக்கு அவ்வப்போது வரவேண்டிய சூழல் நிலவியது. இந்த தவிர்க்க முடியாத சூழ்நிலையை புரிந்து கொண்ட முதல்வர் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் நெரிசலான இடங்களில் கூடுவதால் பல மாவட்டங்களில் மார்க்கெட்டுகள் திறந்த வெளிக்கு மாற்றப்பட்டன. இவ்வாறான சூழலில் கடலூர் மாவட்டம் மஞ்சை மைதானத்தில் திறந்த வெளி மார்க்கெட் அமைக்கப்பட்டிருந்தது.

அங்கு வியாபாரிகள் காய்கறிகளை அநியாய விலைக்கு விற்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. இதனை புரிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அந்த வியாபாரிகளை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார்.

இதனை அடுத்து மஞ்சை மைதானத்துக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் பொது மக்களைப் போல வியாபாரிகளிடம் காய்கறி விலையைக் விசாரித்து வந்தார். அப்போது வியாபாரி ஒருவர் கத்தரிக்காயை விவசாயிகளிடம் இருந்து 12 ரூபாய்க்கு வாங்கி 50 ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது.

உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து ஆட்சியர் அன்புச்செல்வன் அந்த வியாபாரியின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார். சம்பந்தப்பட்ட வியாபாரியின் காய்கறிகளைப் பறிமுதல் செய்ததோடு மற்ற கடைகளில் சோதனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையால் பொது மக்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

author avatar
Parthipan K