தமிழகத்தில் ஆட்டத்தை தொடங்கிய ஆளுநர்! நடுக்கத்தில் அரசியல் கட்சிகள்!

0
91

சென்ற இரண்டு ஆண்டு காலமாக தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் திடீரென்று சென்ற வாரம் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். இதனை அடுத்து தமிழகத்திற்கு புதிய ஆளுநராக மேகாலயா மாநில ஆளுநராக இருந்த உளவுத்துறை மற்றும் காவல் துறையில் பணிபுரிந்து அனுபவம் வாய்ந்த நபராக இருந்த ரவீந்திர நாராயணன் ரவி அவர்களை தமிழகத்தின் ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார்.

இதற்கு தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இதனை கடுமையாக எதிர்த்தார்கள். ரவீந்திர நாராயணன் ரவி உளவுத்துறை மற்றும் காவல்துறையில் பணிபுரிந்த காரணத்தால் அவரை வைத்து தமிழகத்தில் அரசியல் சித்து விளையாட்டுகளை மத்திய அரசு தொடங்க இருப்பதாகவே இங்கே இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் கருதினர். அதன் காரணமாக தான் இந்த ஆளுநர் நியமனத்திற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் இது அனைத்தையும் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்த ஆளும் தரப்பு ஆளுநர் சென்னை வந்தவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அவருடைய அமைச்சரவை சகாக்களுடன் நேரில் சென்று வரவேற்று இருக்கிறார்.பொதுவாகவே மத்திய அரசும் மாநில பிரதிநிதியாக இருக்கும் ஆளுநரை திமுக பெரும்பாலும் எதிர்ப்பது தான் வழக்கம். ஆனால் இவரிடம் அப்படி எதிர்ப்பு காட்டாமல் சற்று இறங்கி வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்ற ரவீந்திர நாராயணன் ரவி காவல்துறை உயர் அதிகாரிகளை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து பேசி வருவது ஆட்சியாளர்கள் இடையே பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. கடந்த 18ஆம் தேதி தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயணன் ரவி பொறுப்பேற்றுக்கொண்டார் இந்த நிலையில், புதிய ஆளுனரை டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கமான நிகழ்வுதான்.

ஆனால் இருந்தாலும் ஆளுநரே நேரடியாக டிஜிபி அவர்களை அழைத்து உரையாற்றி இருப்பதுதான் தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய தினம் காலை 11 மணி அளவில் ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி தமிழக சட்டம் ஒழுங்கு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு வை நேரில் அழைத்து அரைமணி நேரம் ஆலோசனை செய்திருக்கிறார். இதில் சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும், தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுகவைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறதா? என்பது தொடர்பாகவும் கேட்டறிந்து இருக்கின்றார் ஆளுநர்.

இந்த நிலையில் இன்றைய தினம் காலை 11 மணி 20 நிமிடத்திற்கு உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களை அழைத்து ஆளுநர் உரையாற்றி இருக்கிறார்.

நேற்றைய தினம் காவல் துறை இயக்குனர் இன்று உளவுத்துறையை டிஜிபி உள்ளிட்டோரை அழைத்து உரையாற்றி இருக்கின்ற ஆளுநர், நாளையும் நாளை மறுநாளும் உள்துறைச் செயலாளர், மற்றும் தலைமைச் செயலாளரை அழைத்து உரையாற்ற இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே உளவுத்துறையில் பணியாற்றி பெயர் போன ஆர் என் ரவி தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளுக்கு கிலி பிடித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அவர் எடுக்கும் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தமிழக அரசியல் கட்சிகள் சற்று ஆடிப்போய் இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது நடப்பதையெல்லாம் உற்று நோக்கினால் ஆளுநர் தன்னுடைய ஆட்டத்தை தமிழகத்தில் தொடங்கி விட்டார் என்றுதான் தோன்றுகிறது.