முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம்!!

0
136
#image_title

முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இது அரசின் நடவடிக்கை இல்லை என்றும், துறை விதிமுறைகளை மீறியதாக கல்வித்துறை எடுத்துள்ள துறை ரீதியான நடவடிக்கை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டம் ஹொசதுர்கா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணி புரியும் சாந்த மூர்த்தி என்ற ஆசிரியர் தனது முகநூல் பக்கத்தில் கர்நாடக மாநிலத்தில் முதல்வர்களாக இருந்தவர்கள் அவர்களது காலகட்டத்தில் இருந்த கடன்கள் குறித்து விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார். இதில் குறிப்பாக எஸ் எம் கிருஷ்ணா முதல்வராக இருந்த போது 3,590 கோடியாக இருந்த கடன் படிப்படியாக அதிகரித்து சித்தராமையா முதல்வராக தேர்வான போது 2 லட்சம் 42 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவை அவர் பகிர்ந்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செயலுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் பரத் செட்டி இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, பல காங்கிரஸ் அரசு அதிகாரிகள் பிரதமர் மோடியை குறித்து விமர்சனம் செய்திருந்தும் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. காங்கிரஸ் அரசை விமர்சித்து உள்ள ஆசிரியர் மீது எந்த விசாரணையும் செய்யாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஒருதலை பட்சமான செயல் என்று விமர்சனம் செய்துள்ளார்.

இதற்கு பதிலடியாக காங்கிரஸ் அரசின் அமைச்சர் பிரியங்க கார்கே இது அரசின் நடவடிக்கை இல்லை துறை விதிமுறைகளை மீறியதாக கல்வித்துறை எடுத்துள்ள துறை ரீதியான நடவடிக்கை, எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.‌

author avatar
Savitha