அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்! குடும்பத்துடன் மாலத்தீவுக்கு பறந்த இலங்கை அதிபர்!

0
62

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் அங்கே பொது மக்களின் போராட்டம் அதிகரித்ததை தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவருடைய மாளிகையை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் கடந்த சனிக்கிழமை முதல் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இதனையறிந்து கொண்டு அதற்கு முன்னதாகவே அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே திடீரென்று வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து இன்றைய தினம் அவர் விலகுவதாக தெரிவித்திருந்தார். அதேபோல பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்திருந்தார். ஆனாலும் பதவி விலகும் வரையில் அதிபர் மாளிகை விட்டு வெளியேற மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்கள்.

பதவி விலகல் கடிதத்தில் அதிபர் நேற்று முன்தினமே கையெழுத்திட்டதாகவும், இதனை அதிகாரிகள் சபாநாயகரிடம் இன்று ஒப்படைப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக முறைப்படியான அறிவிப்பு சபாநாயகர் மூலமாக வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை மறுநாள் ஆரம்பமாகிறது, புதிய அதிவருக்கான தேர்தல் வருகின்ற 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் வரையில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே செயல்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதிபர் பதவிக்கான மனுக்களை 19ஆம் தேதி வரையில் வழங்கலாம் என்ற சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பாக சஜித் பிரேமதாசாவை நிறுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு நடுவே விசா வழங்க வேண்டும் என்று கோத்தபய ராஜபக்சே விடுத்த கோரிக்கையை அமெரிக்கா சமீபத்தில் நிராகரித்திருப்பதாக தெரிகிறது. அதோடு துபாய் செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை விமான நிலையம் வந்த நிலையில், அவரை பொதுமக்கள் செல்லும் வழியில் செல்ல வேண்டும் என்று குடியேற்றத்துறை அதிகாரிகள் சங்கம் விளக்கம் அளித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சமையல் எரிவாயுவை பெறுவதற்காக பொதுமக்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோலுக்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, சைக்கிள் பயன்படுத்துவதற்கும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மிகவும் நெருக்கடியான இந்த சூழ்நிலையில், இலங்கை மக்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் இந்தியா வழங்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்திருக்கிறார். நெருக்கடிக்கு மத்தியில் 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு இந்திய அனுப்பி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆகவே சிறப்பு விமானப்படை விமானம் மூலமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே என்று அதிகாலை மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. கொழும்புவிலிருக்கின்ற சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் கோத்தபய ராஜபக்சே, அவருடைய மனைவி, மெய்காவலர் உள்ளிட்ட 4 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் மாலத்தீவில் இந்த விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படுமா? என்ற குழப்பத்தின் காரணமாக, விமான நிலையத்திலேயே விமானம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அதன் பிறகு அனுமதி கிடைத்தவுடன் புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.