கவர்னரிடம் புகார் மனுவை வழங்கிய பாஜக! நடவடிக்கை எடுக்கப்படுமா?

0
72

தமிழக அரசை விமர்சனம் செய்து சமூகவலைதளத்தில் கருத்துப்பதிவிட்டதாக தெரிவித்து பாஜக நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனை கண்டிக்கும் விதத்தில் சென்னை தியாகராய நகரில் இருக்கின்ற பாஜக அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு சார்பாக மவுன போராட்டம் நடைபெற்றது.

அந்தப் பிரிவின் தலைவர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த மௌன போராட்டத்தில் பாஜகவின் துணைத் தலைவர் எம் எம் ராஜா, வி பி துரைசாமி, சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், உட்பட பல நிர்வாகிகள் வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு பங்கேற்றதாக தெரிகிறது.

இந்த போராட்டம் தொடர்பாக நிர்மல்குமார் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும்போது, இது முதற்கட்ட போராட்டம் தான் தமிழக அரசும், காவல் துறையும், இதுபோன்ற ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள், வலதுசாரி சிந்தனையாளர்களை தொடர்ந்து பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்தால் அடுத்த கட்ட போராட்டத்தில் இறங்குவோம் என்று தெரிவித்தார். இது போல தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் நேற்று பாஜகவினர் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு அறப் போராட்டத்தில் குதித்தார்கள்.

இந்த சூழ்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து உரையாற்றி இருக்கிறார். கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பாஜகவின் பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், சட்டசபை உறுப்பினர் சரஸ்வதி, சென்னை மாநில தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், முன்னாள் சட்டசபை உறுப்பினர் கு.க செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது தமிழக பாஜகவை சார்ந்தவர்கள் மற்றும் வலைதளங்களில் நியாயமாக கருத்து பதிவு செய்பவர்களை தமிழக அரசு வழக்குப்பதிவு செய்து கைது செய்வதாக கவர்னர் ரவியிடம் அண்ணாமலை கூறியிருக்கிறார். மேலும் இதுதொடர்பான மனுவையும் வழங்கி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.