அண்ணாமலை குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் கடும் தாக்கு!

0
309
#image_title
அண்ணாமலை குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் கடும் தாக்கு!
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் அடுத்த மாதம் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக தரப்பில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜாகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஸ் ஷெட்டருக்கு பாஜகவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை காங்கிரஸ் வழங்கியது. இதனிடையே நேற்று கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கர்நாடக மாநில தேர்தல் பொருப்பாளராக நியமித்தது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 40 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் இருந்தேன். கட்சி தலைமை என்னிடம் ஒப்படைத்த அனைத்து பொறுப்புகளையும் கடமை உணர்வுடன் செயல்படுத்தினேன்.
கட்சியின் செயல்திட்டங்களை எந்த குறையுமில்லாமல், செயல்படுத்திய எனக்கு பாஜ தலைமை கொடுத்த பரிசு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது மட்டுமில்லாமல், சந்தர்ப்பவாதி என்ற பட்டமும் தான். எனக்கு பாஜ தலைமை அநியாயம் செய்துவிட்டது.
தேர்தலில் போட்டியிட எனக்கு சீட் வழங்காமல் தவிர்க்க பலர் முயற்சி மேற்கொண்டனர். அதில் முக்கிய நபராக கட்சியின் தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் இருந்தார். அவரால் கர்நாடக மாநில பாஜ அழிவின் பாதைக்கு சென்று கொண்டுள்ளது.
இதை புரிந்து கொள்ளாமல், சிலர் அந்த நபரிடம் நட்புறவு வைத்து வருகிறார்கள். எனக்கு ஏற்பட்ட நிலை, வேறு சிலருக்கும் வரும் என்பதில் சந்தேகமில்லை. என்னை போல் பலரும் பாஜக தலைமையால் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநிலத்தில் நான் மட்டுமல்ல, எடியூரப்பாவும் முதல்வராக இருந்தபோது, ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து, எங்கள் முன் கை கட்டி வேலை செய்தவர் அண்ணாமலை. அவரை தேர்தல் பொறுப்பாளராக்கியதால், அவர் முன் நாங்கள் கைகட்டி நிற்க வேண்டுமா.
அண்ணாமலை இதுவரை எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். எத்தனை முறை வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த 2021ல் நடந்த தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும் 3 அல்லது 4 தொகுதியில் மட்டுமே பாஜ வெற்றி பெற்றது. இப்படி தேர்தலில் எந்த அனுபவமும் இல்லாத அண்ணாமலை முன் சீனியர் தலைவர்கள் அமர வேண்டிய துர்பாக்கிய நிலையை பாஜக தலைமை ஏற்படுத்தி கொடுத்திருப்பது வெட்ககேடு. இவ்வாறு அவர் கூறினார்