எகிறும் ஸ்டாலின் மவுசு.. திமுகவில் இணைகிறார் கோவை செல்வராஜ்! சரிந்து வரும் அதிமுக கோட்டை

0
215
Kovai Selvaraj
Kovai Selvaraj

எகிறும் ஸ்டாலின் மவுசு.. திமுகவில் இணைகிறார் கோவை செல்வராஜ்! சரிந்து வரும் அதிமுக கோட்டை

சென்னை

நாளை காலை கோவை செல்வராஜ் திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைவதாக கூறப்படுகிறது.

எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது.முன்பெல்லாம், ஒவ்வொரு வீடுகளிலும், சாமி படத்துக்கு பக்கத்திலேயே எம்ஜிஆர் போட்டோவையும் கொங்கு மக்கள் வைத்துக் கொள்வார்களாம்.

கொங்கு மண்டலத்தில் எம்ஜிஆர் செல்வாக்கு

அந்த அளவுக்கு எம்ஜிஆர் அச்சமூக மக்களிடம் நெருங்கி இருந்தார். அவருக்கு பிறகு, மறைந்த ஜெயலலிதாவும் கொங்கு மண்டலத்தை தன் பிடியில் இருந்து விடாமல் இறுக்கமாக பற்றிக் கொண்டு வைத்திருந்தார்.

M G Ramachandran
M. G. Ramachandran

அதனால்தானோ என்னவோ, திமுகவுக்கு கொங்கு மண்டல வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது..

கருணாநிதி இருந்த போதே, கொங்கு வேளாளருக்கு பிசி இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தார். வன்னியர்களுக்கும் கடுமையான போராட்டத்திற்கு பிறகு எம்பிசி இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். அருந்ததியருக்கும் உள்ஒதுக்கீடு செய்தார். இப்படி 3 சாதிகளுக்கும் கருணாநிதி செய்த நலன்கள் எவ்வளவோ இருந்தாலும்கூட, திமுகவால் அங்கு நிலையாக கால் ஊன்ற முடியவில்லை.

அதேசமயம், எம்ஜிஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, கருணாநிதியும் கூட, தங்கள் கட்சிகளை ஒருபோதும் சாதிக்கட்சிகளாக அடையாளப்படுத்தி கொண்டதே இல்லை, மாறாக, அனைத்து மக்களுக்கும் பொதுவானர்கள் தாங்கள் என்பதைதான் தங்கள் அடையாளமாக நிலைநிறுத்தி கொண்டனர். இதுவே அந்த ஆளுமைகளின் வெற்றியாகவும் இன்று வரை கருதப்படுகிறது.

குறிப்பாக அதிமுகவை விட திமுக சாதி ஒழிப்பு மற்றும் திராவிட கொள்கைகளை அதிகம் பின்பற்றுவதால் கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற முடியவில்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது. அந்த வகையில் இந்த முறை திமுக தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றியபோதிலும், காலை வாரியதும், கை நழுவிவிட்டதும் வழக்கம் போல இதே கொங்கு மண்டலம்தான் என்பதை மறுக்க முடியாது.

MK Stalin
MK Stalin

கடந்த காலங்களில், கொங்கு மண்டலத்தில் கருணாநிதி எடுத்த சில தவறான முடிவுகளும், அரசியலும்கூட காரணமாக இருந்தன என்று அரசியல் ஆய்வாளர்கள் சொன்னாலும், “வெள்ளாள கவுண்டர்” என்ற அசைக்க முடியாத பலத்தை அதிமுக தன்னிடம் தக்க வைத்ததும் இன்னொரு காரணம்.

இதற்கு பிறகுதான், திமுகவின் கவனம் கொங்கு கோட்டையை நோக்கி பாய்ந்தது. முத்துசாமி, சக்கரபாணி, வெள்ளக்கோயில் சாமிநாதன், என சீனியர்கள் பலர் இருந்தாலும், இவர்களுடன் இணைந்து செயல்பட, செந்தில்பாலாஜி போன்ற பசையுள்ள நபர்களும் தேவையாக இருக்கிறார்கள்.

Senthilbalaji
Senthilbalaji

அந்த வகையில் கொங்குவை திமுக பக்கம் கட்டி இழுத்து கொண்டவரும் மிகப்பெரிய அசைன்மென்ட்டை செந்தில்பாலாஜியிடம் தந்துள்ள நிலையில், அந்த பணிகள் ஒவ்வொன்றாக வேகம் எடுத்து வருகின்றன.

திமுக தலைமை தன்னை நம்பி கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொண்ட செந்தில்பாலாஜி பாஜக, அதிமுக, அமமுக போன்றவைகளின் அதிருப்தியாளர்களுக்கு தூண்டிலை போட்டு, திமுக பக்கம் இழுத்து வந்து கொண்டிருக்கிறார்.

அந்த லிஸ்ட்டில் தற்சமயம் இணைந்தவர் தான், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ். வைத்திலிங்கத்தின் மீது முரண்பட்ட விவகாரம் இருந்து வந்த நிலையில், கோவை செல்வராஜ், ஓபிஎஸ் தரப்பில் இருந்து சற்று விலகியே இருந்து வருகிறார். ஓபிஎஸ் அணி சார்பில் நடக்கும் எந்த ஒரு கூட்டத்திலும் கோவை செல்வராஜ் பங்கேற்காமலும் இருந்து வந்தபோதே, பலருக்கும் இது சந்தேகத்தை கிளப்பியது.

இறுதியில், கட்சியை விட்டு விலகுவதாகவே அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியை காரசாரமாக, கோவை செல்வராஜ் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், அந்த பக்கமும் செல்ல முடியாத நிலைமை ஏற்படவும், வேறு எந்த கட்சியில் செல்வராஜ் இணையக்கூடும் என்ற கேள்வி எழுந்தது.

திராவிட சித்தாந்தத்தில் ஊறிப்போன செல்வராஜ், நிச்சயம் பாஜக பக்கம் செல்ல வாய்ப்பிருக்காது என்றும் கணிக்கப்பட்டது. அதற்கேற்றார்போல், திமுக பக்கம் சென்றாலும் தப்பு ஒன்றும் இல்லையே என்று செல்வராஜே ஒரு டிவியில் பேட்டியும் தந்தார்.

இப்படிப்பட்ட சூழலில்தான், நாளைய தினம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைய போவதாக தகவல்கள் கூறுகின்றன. கோவை செல்வராஜ் போன்ற சீனியர்களை ஓபிஎஸ் தரப்பில் கைநழுவி விட்டிருக்க கூடாது என்றே பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.. எனினும், இந்த சந்தர்ப்பத்தை, திமுக மிக சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளது என்றும், இதற்கு செந்தில்பாலாஜியின் சாமர்த்தியமே காரணம் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, தன்னுடைய ஆதரவாளர்களையும் இணைத்து கொண்டு, நாளைய தினம் திமுகவில் செல்வராஜ் இணைய உள்ள நிலையில், கொங்கு அதிமுக கோட்டையானது, மேலும் கரைந்து விழ ஆரம்பித்துள்ளது.

author avatar
Parthipan K