விமானத்தில் பயணம் செய்து அழுத்துப்போனவர்களுக்கு இதோ ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா! நம்ம ஊருக்கும் வந்தாச்சு! 

0
231
#image_title

விமானத்தில் பயணம் செய்து அழுத்துப்போனவர்களுக்கு இதோ ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா! நம்ம ஊருக்கும் வந்தாச்சு! 

நிலா! நிலா! ஓடி வா!  நில்லாமல் ஓடி வா! என்று நிலாவை அழைத்த காலம் மலையேறி விட்டது. இன்று அந்த நிலாவிற்கே நாம் சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறோம். நிலாவில் வடை சுடும் பாட்டியை பார்த்து ஹாய் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

விமானத்தில் செல்வது போல் அடிக்கடி ராக்கெட்டில் விண்வெளி செல்லும் காலம் நெருங்கிக் கொண்டு வருகிறது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ்( space x)  நிறுவனமானது ஏற்கனவே பல்வேறு விண்வெளி சுற்றுலா பயணங்களை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. இதேபோல் பல விண்வெளி நிறுவனங்களும் தற்போது விண்வெளி சுற்றுலாவிற்கு தயாராகி வருகின்றன.

இதையடுத்து ஹாலிவுட் படத்தை விட கம்மி பட்ஜெட்டில் செவ்வாய்க்கு ராக்கெட் விட்ட இஸ்ரோவும்  விண்வெளி சுற்றுலாவிற்கான சேவையை தொடங்க ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதனால் இஸ்ரோவும் 2030 ஆண்டில் விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அழைத்து செல்வதற்காக தொழிநுட்பத்தை சோதனை செய்து வருகிறது. பாதுகாப்பான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளிபயணத் தொகுதிகளை இஸ்ரோ சொந்தமாக தயாரித்து வருகின்றது.

வருகின்ற 2030ல் தொடங்க இருக்கின்ற இந்த விண்வெளி சுற்றுலா குறித்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறி இருப்பதாவது,

இந்த விண்வெளி சுற்றுலா  பயணத்தை மேற்கொள்ளும் மக்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பும்படியாக ராக்கெட் தொகுதிகள் தயாரிக்கும் பணி வேகம் எடுத்து  செயல்பட்டு வருகின்றன. விரைவில் முழு அமைப்புகளும் உருவாக்கப்பட்டு பின்னர் சோதனைகளும் நடைபெறும்”  என்று தெரிவித்துள்ளார்.

அது சரி அடுத்து விண்வெளி சுற்றுலா விற்கான கட்டணம் என்ன என்பது பலரின் கேள்வியாக உள்ளது. இந்த விண்வெளி சுற்றுலாவிற்கு ஒரு டிக்கெட்டின் விலை 6 கோடியாக இருக்கும் என அவர்களே உத்தேசமாக விலையை தெரிவித்துள்ளனர். ஆனால் மேலும் இது சந்தையில் உள்ள மற்ற சுற்றுலா பயணங்களின் விலைகளை பொருத்து மாறுபாடு ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு கோடி ரூபாய் கொடுத்து செல்லும் பயணம் எவ்வளவு தூரம் இருக்கும் என்று அனைவருக்கும் ஆவல் இருக்கும். ஏற்கனவே விண்வெளி சுற்றுலாவில் அனுபவம் இருக்கும் spacex, ப்ளூ ஆர்ஜின் போன்ற நிறுவனங்கள் தங்கள் மறுபயன்பாடு நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் பூமியை தரைமட்டத்தில் இருந்து உயர்ந்து வளிமண்டலத்தின் விளிம்பில் உள்ள துணை சுற்றுப்பாதையில் 15 நிமிடம் குறைந்த புவிஈர்ப்பு விசை நிலையை அனுபவிக்க வாய்ப்பளித்து வருகின்றனர்.

அதேபோல் இஸ்ரோ விண்வெளி சுற்றுலா பயணமும் கிட்டத்தட்ட இதே அளவை தான் எட்டும். விண்வெளியின் விளிம்பில் நின்று அதனை முழுவதுமாக உணர்ந்து விட்டு வரும் நிலையாக தான் இந்த பயணம் அமையும். மேலும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டமும், விண்வெளி சுற்றுலாத் திட்டமும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

விண்வெளிப் பயணத்தின் பாதுகாப்பு அம்சம் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோ தலைவர், விண்வெளிப் பயணங்களின் பாதுகாப்பு குறித்த கூடுதல் அறிவைப் பெற மறுபயன்பாட்டு லான்ச் வெஹிக்கிள் – டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டரை (ஆர்எல்வி-டிடி) பயன்படுத்துகிறோம் என்றார். இதன் மூலம் சாமானிய மக்களும் பாதுகாப்பாக பயமின்றி விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.

விண்வெளி சுற்றுலா செல்ல விருப்பமுள்ளவர்கள் இப்போது இருந்தே ஆறு கோடியை சேமிக்க தொடங்க வேண்டியது தான் பாக்கி! இனி அயல்நாடுகளுக்கு விமானத்தில் சுற்றுலா செல்வது போல ராக்கெட்டில் அடுத்த கிரகங்களுக்கு சுற்றுலா செல்லும் காலம் வெகு தொலைவில்  இல்லை.