கோவில் குளத்தில் கலந்த விஷத்தினால் இறந்து மிதந்த மீன்கள்..! ஏலம் ரத்துதான் காரணமா..? நாகூரில் அதிர்ச்சி!

0
90

நாகூர் நாகநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான குளத்தில் விஷம் கலக்கப்பட்டதால் மீன்கள் இறந்து மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், நாகூரில் பிரசித்தி பெற்ற நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் ராகு பெயர்ச்சி, சிவராத்திரி, பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். இந்த கோயிலுக்கு சொந்தமான குளத்தில் பக்தர்கள் நீராடுவது வழக்கம், அது மட்டுமல்லாமல் அப்பகுதி மக்கள் பலர் குளிப்பது, துணி துவைப்பது போன்றவற்றிற்கும் அந்த குளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

அதேசமயம் அந்தக் குளத்தை ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்பட்டு குளத்தில் வளரும் மீன்களைப் பிடித்து விற்பனை செய்வது வழக்கம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு குளம் ஏலம் விடப்படவில்லை. அதனால் கோவில் நிர்வாகம் சார்பில் குளம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் குளம் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், குறைவான தொகைக்கு ஏலம் போனதால், அந்த ஏலம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குளிப்பதற்காக நேற்று அதிகலை குளத்துக்கு சென்ற அப்பகுதி மக்கள், குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், குளத்து நீர் ஆங்காங்கே நிறம் மாறி இருந்ததையடுத்து சிலர் நீரை அள்ளி முகர்ந்தபோது, பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது போன்ற வாடை வீசியுள்ளது.

இதுகுறித்து நாகூர் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏலம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து குளத்தில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Parthipan K