விதைகளை இனி பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து உழவர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் – மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை

0
181
Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021
Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

விதைகளை இனி பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து உழவர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் – மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகையை அனுமதித்தால் இது வரை தாங்களாகவே உற்பத்தி செய்து வந்த கடுகு விதைகளை, இனி பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து உழவர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். அதனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகையின் விதை உற்பத்திக்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அளித்துள்ள அனுமதிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரை வணிக நோக்கில் பயிரிட அனுமதிப்பதற்கு முன்னோட்டமாக, அதன் விதைகளை உற்பத்தி செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்திருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தால், இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரின் வணிக நோக்கிலான சாகுபடி அடுத்த இரு ஆண்டுகளில் தொடங்கி விடும். இது ஆபத்தானது.

டெல்லியில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை உற்பத்தியும், விதை உற்பத்தியின் போது நடத்தப்படும் கள ஆய்வுகளும் திட்டமிட்டபடி நடைபெற்றால், அடுத்த 2 ஆண்டுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வணிக அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்டு, சந்தைக்கு வந்து விடும். அது நிகழ்ந்தால் இந்தியாவில் உணவுப்பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் எந்த வகையிலும் இந்திய மக்களின் உடல்நலனுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ உகந்தது அல்ல. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிர் களைக்கொல்லிகளை தாங்கி வளரும் தன்மை கொண்டதாகும். மரபணு மாற்றப்பட்ட கடுகு ஓரிடத்தில் பயிரிடப்பட்டால், அந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் மற்ற பயிர்களுக்கும் இந்த தன்மை ஏற்படக்கூடும். அதனால், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி ஆகியவற்றை சகித்துக் கொண்டு வளரும் பயிர்களின் வகைகள் அதிகரித்து விடும். இது சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும்.

2017ம் ஆண்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகையை வணிக நோக்கில் பயிரிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட போது அதை பாமக கடுமையாக எதிர்த்தது. சுற்றுசூழல் அமைப்புகளும் மரபணு மாற்றப்பட்ட கடுகு வகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அளித்த அனுமதிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்தது. 2017ம் ஆண்டில் முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்ட போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகை குறித்து என்னென்ன அச்சங்கள் தெரிவிக்கப்பட்டனவோ, அந்த அச்சங்கள் இப்போதும் தொடருகின்றன.

இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ள டிஎம்எச் 11 வகை கடுகை டெல்லி பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், மரபணுவியல் வல்லுனருமான தீபக் பெந்தல் தலைமையிலான குழு தான் உருவாக்கி உள்ளது. ஆனால், இதுகுறித்த ஆய்வின் அடிப்படையையே ஆராய்ச்சிக் குழுவினர் மாற்றி விட்டனர். அது குறித்து ஒழுங்குமுறை அமைப்புக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. விதிமுறைகளை மதிக்காமல் செயல்பட்ட ஆய்வுக்குழுவினர் அளித்த தகவல்களை நம்பி மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்திருப்பது ஆபத்தானது; அது சீரழிவை ஏற்படுத்தி விடும்.

இவை அனைத்தையும் கடந்து இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரை வணிக நோக்கில் பயிரிட எந்த தேவையும் இல்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகில் உற்பத்தியை பெருக்குவதற்கான எந்த சிறப்பு மரபணுவும் இல்லை. கலப்பின பயிர்களில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திறன் எந்த அளவுக்கு இருக்குமோ, அதே அளவு தான் மரபணு மாற்றப்பட்ட கடுகிலும் விளைச்சல் திறன் அதிகமாக இருக்கும். இந்தியாவில் இயல்பாகவே கடுகு உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் இது தேவையற்றது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகையை அனுமதித்தால் இது வரை தாங்களாகவே உற்பத்தி செய்து வந்த கடுகு விதைகளை, இனி பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து உழவர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இந்தியாவில் சில பத்தாண்டுகளுக்கு முன் மரபணு மாற்றப்பட்ட பருத்தி அறிமுகம் செய்யப்பட்ட போது, அதை பயிரிட்ட உழவர்களுக்கு எத்தகைய பாதிப்புகளையும், சீரழிவுகளையும் ஏற்படுத்தி உழவர்களை தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு தூண்டியதோ, அதே சூழலையும், பாதிப்புகளையும், சீரழிவையும் மரபணு மாற்றப்பட்ட கடுகு வகையும் ஏற்படுத்தக்கூடும்.

அறிவியல் வளர்ச்சியும், தொழில்நுட்பமும் உழவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். கடுகு உள்ளிட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட எந்த பயிரும் உழவர்களுக்கு நன்மை செய்யாது; தீமை தான் ஏற்படுத்தும். எனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகையின் விதை உற்பத்திக்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அளித்துள்ள அனுமதிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதிக்க வேண்டும். அத்துடன் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எந்த காலத்திலும் அனுமதி அளிக்கப்படாது என்பதை மத்திய அரசு கொள்கை முடிவாக எடுத்து அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.